செவ்வாய் கிரகத்தில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி வந்தி வர்மா: ஏஐ உதவியுடன் இயங்கிய பெர்சீவரன்ஸ்
செய்தி முன்னோட்டம்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர், கடந்த 2025 டிசம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. மனிதர்களால் திட்டமிடப்படாமல், முழுமையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் திட்டமிடப்பட்ட பாதையில் இந்த ரோவர் வெற்றிகரமாகப் பயணித்தது. இந்த மகத்தான சாதனையின் பின்னணியில் இருக்கும் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி வந்தி வர்மா.
பயணம்
வந்தி வர்மா: ஒரு உத்வேகமான பயணம்
வந்தி வர்மா இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். விமானப்படை அதிகாரியின் மகளான இவருக்கு, சிறுவயது முதலே தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் மின்னியல் பொறியியல் பயின்றார். பின்னர் அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 2007 இல் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் இணைந்த இவர், ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி மற்றும் கியூரியாசிட்டி போன்ற பல முக்கிய ரோவர் திட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
ஏஐ
ஏஐ மூலம் இயங்கிய ரோவர் - என்ன நடந்தது?
பொதுவாகச் செவ்வாய் கிரகத்தில் ரோவரை இயக்குவதற்கு பூமியிலிருந்து விஞ்ஞானிகள் ஒவ்வொரு அடியையும் திட்டமிட்டு கட்டளைகளை அனுப்புவார்கள். ஆனால், இந்த முறை ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி புதிய முறை சோதிக்கப்பட்டது. சுற்றுப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட படங்களை ஏஐ பகுப்பாய்வு செய்து, பாறைகள் மற்றும் மணல் மேடுகளை அடையாளம் கண்டு, ரோவர் செல்வதற்கான பாதுகாப்பான பாதையைத் தானாகவே உருவாக்கியது. இந்தச் சோதனையின் போது ரோவர் சுமார் 450 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை ஏஐ திட்டமிட்ட பாதையில் கடந்து சாதனை படைத்தது.
சாதனை
ஏன் இந்தச் சாதனை முக்கியமானது?
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே தகவல்கள் சென்று சேர 4 முதல் 24 நிமிடங்கள் வரை தாமதமாகும். இதனால், பூமியிலிருந்து ஜாய்ஸ்டிக் மூலம் ரோவரை இயக்குவது சாத்தியமில்லை. ஏஐ தொழில்நுட்பம் ரூட் பிளானிங் நேரத்தைப் பாதியாகக் குறைக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களின் தலையீடு இன்றியே ரோவர்கள் கிலோமீட்டர் கணக்கில் பயணம் செய்து, முக்கியமான பாறைகளைத் தாமாகவே கண்டறிய உதவும்.