இனி ஸ்மார்ட்வாட்ச்சிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.. விரைவில் வெளியாகும் அப்டேட்!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச் பயனர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இனி வாட்ஸ்அப்பை ஸ்மார்ட்வாட்ச்சிலேயே பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது பீட்டா டெஸ்டிங் மூலம் சோதனை செய்து வரும் வெர்ஷனை ஸ்மார்ட்வாட்ச் இயங்குதளமான வியர் ஓஎஸ்ஸிலும் பயன்படுத்துவம் வகையில் புதிய அப்டேட்டை செய்திருக்கிறது வாட்ஸ்அப். இதன் மூலம் வாட்ஸ்அப்பை நேரடியாக வியர் ஓஎஸ் பயனர்களால் ஸ்மார்ட்வாட்சிலேயே பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப்பின் பீட்டா டெஸ்டாரக இருக்கும் பட்சத்தில் உங்களாலும் இந்தப் புதிய வசதியை தற்போது சோதனை செய்து பார்க்க முடியும். இதற்கு கூகுள் பிளேஸ்டோரில் வாட்ஸ்அப்பின் பீட்ட வெர்ஷனான 2.23.10.10 வெர்ஷனை அப்டேட் செய்து பயன்படுத்தலாம்.
என்னென்ன வசதிகள்.. எப்படிப் பயன்படுத்துவது?
ஸ்மார்ட்வாட்சில் வாட்ஸ்அப்பை இணைக்க, வாட்சில் தோன்றும் 8 இலக்க எண்ணை மொபைலில் பதிவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்கள் மொபைலில் இருக்கும் வாட்ஸ்அப் கணக்கு ஸ்மார்ட்வாட்சிலும் சின்க் ஆகிவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஸ்மார்ட்வாட்ச் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளும் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் செய்யப்பட்டிருக்கும் என்பது தான். இது முதற்கட்டம் என்பதால் மெஸேஜ் மற்றும் வாய்ஸ் மெஸேஜ் வசதிகளை மட்டுமே ஸ்மார்ட்வாட்ச்சின் மூலம் பயன்படுத்த முடியும். வீடியோக்கள் மற்றும் காலிங் வசதியை இனி வரும் அப்டேட்களில் வாட்ஸ்அப் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவையை இது போல ஸ்மார்ட்வாட்சில் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய வசதி விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.