LOADING...
அன்லிமிடெட் 5ஜி உண்மையிலேயே அன்லிமிடெடா? ரீசார்ஜ் செய்யும் முன் கவனிக்க வேண்டிய மறைமுகக் கட்டுப்பாடுகள்
அன்லிமிடெட் 5ஜி பின் உள்ள உண்மைகள்

அன்லிமிடெட் 5ஜி உண்மையிலேயே அன்லிமிடெடா? ரீசார்ஜ் செய்யும் முன் கவனிக்க வேண்டிய மறைமுகக் கட்டுப்பாடுகள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 26, 2026
10:18 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் "அன்லிமிடெட் 5ஜி" (Unlimited 5G) திட்டங்களை மிகப்பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகின்றன. திரைப்படங்களைப் பார்ப்பது, கேமிங் அல்லது பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது போன்றவற்றுக்கு இது மிகவும் வசதியானது என்று கருதப்பட்டாலும், இதில் பல மறைமுகக் கட்டுப்பாடுகள் இருப்பதை பெரும்பாலான பயனர்கள் கவனிப்பதில்லை. ரீசார்ஜ் செய்வதற்கு முன் இந்த "அன்லிமிடெட்" என்பதன் பின்னால் உள்ள யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

கட்டுப்பாடுகள்

மறைமுகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள்

பெரும்பாலான அன்லிமிடெட் 5ஜி திட்டங்கள் "ஃபேர் யூசேஜ் பாலிசி" (Fair Usage Policy - FUP) என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) போன்ற நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் (உதாரணமாக 300 ஜிபி) டேட்டாவைப் பயன்படுத்தினால், அதை வணிக ரீதியான பயன்பாடாகக் கருதி, இணைய வேகத்தைக் குறைக்கவோ அல்லது சேவையை நிறுத்தவோ உரிமை வைத்துள்ளன. ஜியோ (Jio) தற்போது வரை அத்தகைய வரம்புகளை விதிக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.

கவரேஜ்

5ஜி கவரேஜ் மற்றும் ஸ்மார்ட்போன் தரம்

"அன்லிமிடெட் 5ஜி" என்பது உங்கள் பகுதியில் போதுமான 5ஜி கவரேஜ் இருந்தால் மட்டுமே முழுமையாகச் செயல்படும். சிறிய நகரங்கள், கிராமங்கள் அல்லது கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும்போது, உங்கள் ஸ்மார்ட்போன் தானாகவே 4ஜிக்குத் தாவிவிடும். அந்த சமயத்தில் உங்கள் பழைய 4ஜி டேட்டா வரம்புகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதேபோல், உங்கள் ஸ்மார்ட்போன் இந்திய 5ஜி பேண்டுகளை (5G bands) முழுமையாக ஆதரிக்கவில்லை என்றால், ரீசார்ஜ் செய்தும் வேகமான இணையத்தைப் பெற முடியாது.

Advertisement

சிக்கல்கள்

ஹாட்ஸ்பாட் மற்றும் பிற சிக்கல்கள்

பல திட்டங்களில் மொபைலில் பயன்படுத்தும் டேட்டாவிற்கு வரம்பு இல்லையென்றாலும், ஹாட்ஸ்பாட் மூலம் பிற சாதனங்களுக்கு டேட்டாவைப் பகிரும்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மேலும், 5ஜி பயன்பாடு மொபைலின் பேட்டரியை மிக வேகமாகத் தீர்க்கும் மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தினால் சாதனம் சூடாகும் பிரச்சனையும் ஏற்படுகிறது. இது உங்கள் மொபைலின் நீண்டகால ஆயுளைப் பாதிக்கக்கூடும். எனவே, இந்தத் திட்டங்களை எடுக்கும்போது உங்கள் அன்றாட டேட்டா தேவை மற்றும் பயன்பாட்டு முறையைச் சரியாகத் திட்டமிடுவது அவசியம்.

Advertisement

சரியான திட்டம்

சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வெறுமனே 'அன்லிமிடெட்' என்ற விளம்பரத்தைப் பார்த்து ரீசார்ஜ் செய்யாமல், உங்கள் பகுதியில் 5ஜி கவரேஜ் எப்படி உள்ளது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். நீங்கள் அதிகப்படியான டேட்டாவைப் பயன்படுத்துபவர் என்றால், நிறுவனங்களின் விதிமுறைகளை (T&C) ஒருமுறை வாசிப்பது நல்லது. சீரான இணைய வேகம் கிடைக்கிறதா, ஹாட்ஸ்பாட் வசதி இதில் அடங்குமா போன்ற கேள்விகளைக் கேட்டு தெளிவு பெறுங்கள். தவறான திட்டத்தைத் தேர்வு செய்வது, இறுதியில் உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Advertisement