UIDAI-ன் புதிய ஆதார் செயலி: வீட்டிலிருந்தே மொபைல் எண் மற்றும் முகவரியை புதுப்பிக்கும் வசதி
செய்தி முன்னோட்டம்
பொதுமக்கள் தங்களது ஆதார் தரவுகளை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கும், தேவையற்ற தரவு கசிவைத் தவிர்ப்பதற்கும் புதிய ஆதார் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஹோட்டல் செக்-இன் அல்லது சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் நகல்களை கொடுக்கும்போது ஏற்படும் அபாயங்களை குறைக்க இது உதவும். உங்கள் டிஜிட்டல் அடையாளத்தை எளிதாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் நிர்வகிக்கும் நோக்கில், பாதுகாப்பான ஆஃப்லைன் சரிபார்ப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு பகிர்வு மற்றும் மொபைல் எண் புதுப்பிப்புகள் போன்ற அம்சங்களைக் கொண்டு வரும் புதிய ஆதார் செயலியை UIDAI வெளியிட்டுள்ளது.
வசதிகள்
வீட்டிலிருந்தே அப்டேட் செய்யலாம்
இந்தச் செயலியின் மூலம் உங்கள் மொபைல் எண் மற்றும் வீட்டு முகவரியை நேரடியாகப் புதுப்பிக்க முடியும். இதற்கு சிறிய அளவிலான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, செயலியில் கேட்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றினால் போதுமானது. இணைய வசதி இல்லாமலேயே உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன: உங்கள் போனில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடி ஆவணங்கள் இன்றி சரிபார்ப்பை முடிக்கலாம், அல்லது பாஸ்சவர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்ட கோப்பு மூலம் பெயர், வயது போன்ற தேவையான விபரங்களை மட்டும் பகிரலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளுக்காக ஒரே செயலியில் 5 ஆதார் சுயவிபரங்களை (Profiles) உருவாக்கி நிர்வகிக்கலாம்.
செயல்பாடு
பதிவிறக்கம் மற்றும் புதிய விதிமுறை
ஆண்ட்ராய்டு பயனர்கள் 'Google Play Store' மற்றும் ஐபோன் பயனர்கள் 'Apple App Store' மூலம் அதிகாரப்பூர்வ "Aadhaar" செயலியை பதிவிறக்கம் செய்யலாம். செயலியை திறந்து, உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து லாகின் செய்யவும். ஆதார் விபரங்களை ஆஃப்லைன் மூலம் சரிபார்க்க விரும்பும் வங்கிகள், ஹோட்டல்கள் போன்ற நிறுவனங்கள் இனி அரசிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என UIDAI உத்தரவிட்டுள்ளது. இது தவறான பயன்பாடுகளைத் தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.