ஸ்பாம் கால்களை தடுப்பதற்கான DND செயலினை மறுசீரமைப்பு செய்யும் டிராய்
வணிக ரீதியிலான ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகளில் இருந்து இந்திய மொபைல் பயனாளர்கள் விடுதலை வெற 2016ம் ஆண்டு DND (Do Not Disturb) செயலியை அறிமுகப்படுத்தியது டிராய் (TRAI) அமைப்பு. பயனாளர்களுக்கு வரும் ஸ்பாம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் குறித்த அந்தச் செயலியில் புகார் அளிக்க முடியும். மேலும், நாம் ப்ரமோஷனல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெற வேண்டாம் என நினைக்கும் பட்சத்தில், அதற்காக இந்த செயலியில் பதிவு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த செயலில் உள்ள கோளாறுகள் காரணமாக, மேற்கூறிய வசதிகள் எதையும் பயன்படுத்த முடியாமல் தேவையற்ற ஒரு செயலியாகவே தற்போது வரை இருந்து வருகிறது.
கோளாறுகளை சரி செய்யவிருக்கும் டிராய்:
தாங்கள் அறிமுகப்படுத்திய DND செயலியில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்து, அனைத்து ஆண்ட்ராய்டு வெர்ஷன்களிலும் பயன்படுத்தும் வகையில் புதிய செயலியாக மாற்றவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டிராய் அமைப்பின் செயலாளர் ரகுனந்தன். மேலும், DND செயலியில் இந்த மாற்றங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் அவர். இதுதவிர ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே மேற்கூறிய DND செயலியினை பயன்படுத்த முடிவதாகவும், ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்புக் கொள்கைகளினால் ஐபோன்கள் இந்த செயலியினை பயன்படுத்த முடியவில்லை என்ற புகார்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. விரைவில் ஐபோன்களிலும் தங்களது DND செயலி இயங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
ஸ்பாம் கால்களை தடுப்பது எப்படி?
இந்த DND செயலியைத் தவிர்த்து, குறுஞ்செய்தி மூலமாகவே நமது மொபைல் எண்ணை DND வசதி வேண்டிய பதிவு செய்ய முடியும். DND வசதிக்காக பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு, ப்ரோமோஷனல் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விதமான ப்ரமோஷனல் குறுஞ்செய்திகளும் வேண்டாம் என்பவர்கள், உங்களுடைய மொபைல் எண்ணில் இருந்து '1909' என்ற எண்ணுக்கு 'START 0' என்பதனை குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பினால் போதும். பேங்கிங், ரியல் எஸ்டேட் மற்றும் OTT என குறிப்பிட்ட ப்ரமோஷனல் அழைப்புகள் வந்தால் பரவாயில்லை என நினைப்பவர்கள், அதனை மட்டும் தவிர்த்துவிட்டு பிற ஸ்பாம் அழைப்புகளைத் தடுக்க 'START 1', 'START 2' என குறிப்பிட்ட பிரிவுக்கான எண்ணை சேர்த்து அனுப்பினால் போதும்.