Loading...
தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு
இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு நகரமான 'அறிவகம்'

தூத்துக்குடி விண்வெளி மண்டலம் முதல் அறிவகம் வரை: தொழில் துறைக்கான பிரம்மாண்ட பட்ஜெட் ஒதுக்கீடு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2026
03:29 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மாநிலத்தின் தொழில் துறை மேம்பாட்டிற்காகவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பல பிரம்மாண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GSDP) 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ரூ.35,062 கோடி மதிப்பிலான 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 14,790 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதியை மையமாக கொண்ட உற்பத்தியை ஊக்குவிக்கப் புதிய 'தமிழ்நாடு தொழில் கொள்கை' விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

AI தளங்கள்

முதலீடுகளை எளிதாக்கும் AI தளங்கள்

முதலீட்டாளர்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முதலீட்டு தளமாக 'வழிகாட்டி 3.0' மற்றும் 'Single Window Portal 3.0' அறிமுகப்படுத்தப்படும்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும். *

மாநில உற்பத்தி மற்றும் விநியோக திறன் விவரங்களை உள்ளடக்கிய 'Tamil Nadu Industrial Capability Directory' டிஜிட்டல் தளமாக உருவாக்கப்படும்.

தொழில் பூங்காக்கள்

புதிய விண்வெளி மண்டலம் மற்றும் தொழில் பூங்காக்கள்

குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தை மையமாகக் கொண்டு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை உள்ளடக்கிய 'சிறப்பு விண்வெளி தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3,200 கோடி செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

தொழில்நுட்ப துறையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தியாவின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு நகரமான 'அறிவகம்' திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நகரில் AI பல்கலைக்கழகம், பன்னாட்டு திறன் பயிற்சி மையம், செமிகண்டக்டர் பரிசோதனைக் கூடம் மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் 'இன்குபேட்டர்கள்' அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT