சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது? சனிக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக நாசா அறிவிப்பு
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 6 முதல் விண்வெளியில் சிக்கியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸை போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் அல்லது ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் கேப்ஸ்யூல் மூலம் பூமிக்கு கொண்டு வருவதற்கான இறுதி முடிவை நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாட்கள் தங்கியிருப்பது போல் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரின் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், அவர்கள் சென்ற விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் விண்வெளியில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்லைனர் விண்கலத்தின் பாதுகாப்பு
ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் சுற்றும் சர்வதேச விண்வெளி மையத்தை நெருங்கியதும், உந்துதல்களின் தோல்வி மற்றும் உந்துவிசை அமைப்பில் ஹீலியம் கசிவு போன்ற தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது. பொறியாளர்களால் செயலிழந்த ஐந்து உந்துசக்திகளில் நான்கை மீண்டும் ஆன்லைனில் கொண்டு வர முடிந்தாலும், அதை பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி கொண்டுவருவது குறித்த கவலை உள்ளது. ஸ்டார்லைனர் பாதுகாப்பாக இருப்பதாக போயிங் அறிவித்தாலும், நாசா அதிகாரிகள் அதற்கு உடன்படவில்லை. ஸ்டார்லைனர் சனிக்கிழமையன்று பயணிக்க தகுதியற்றது என்று நாசா கருதினால், 2025 பிப்ரவரியில் வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலில் பூமிக்கு திரும்புவார்கள்.