செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. தற்போது பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறும் அளவு உந்து விசையைப் பெற பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறது ஆதித்யா L1. சந்திரயானைப் போலவே, ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா உயர்த்தி வருகிறது இஸ்ரோ. இறுதியாக கடந்த செப்டம்பர் 15ம் தேதி, கடைசி சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நாளை ஆதித்யா L1 நிலைநிறுத்தப்படவிருக்கும் முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை நோக்கிய பாதையில் ஆதித்யா L1ஐ செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.
செயல்பாட்டைத் தொடங்கிய STEPS கருவி:
ஆதித்யா L1 பூமியை சுற்றிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதில் பொருத்தப்பட்டிருக்கும் STEPS (Supra Thermal & Energetic Particle Spectrometer) கருவியின் செயல்பாட்டைக் கடந்த செப்டம்பர் 10ம் தேதியே தொடங்கியிருக்கிறது இஸ்ரோ. இந்தக் கருவியானது, பூமியிலிருந்து ஆதித்யா L1 விண்கலமானது 50,000 கிமீ தொலைவில் இருக்கும் போது, ஆற்றல் நிறைந்த அயனிகளின் கணக்கிட்டிருக்கிறது. இவற்றைக் கணக்கிடுவதன் மூலம், பூமியைச் சுற்றியிருக்கும் அயனிகள் மற்றும் துகள்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும் என இது குறித்த எக்ஸ் பதிவில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை நோக்கிய ஆத்தியா L1 விண்கலத்தின் பயணத்தின் போதும் இந்த STEPS கருவி செயல்பாட்டிலேயே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.