LOADING...
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தாமதமாவது ஏன்? மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 28, 2025
07:10 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணையச் சேவைகள் இந்தியாவில் தொடங்குவதில் நிலவும் தாமதம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் ஆகியவையே இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள்

பாதுகாப்பு விதிமுறைகளும் நிபந்தனைகளும்

அமைச்சர் கூறுகையில், ஸ்டார்லிங்க், ஒன்வெப் மற்றும் ஜியோ எஸ்ஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் விதித்துள்ள நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார். குறிப்பாக, இந்தியப் பயனர்களின் தரவுகள் இந்தியாவிற்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அமைப்புகளின் தணிக்கைக்கு உட்பட்ட தொழில்நுட்ப நிபந்தனைகளை நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே தற்காலிக ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் தங்களின் பாதுகாப்புத் தயார்நிலையை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

விலை

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம்

மக்களுக்குச் சேவை வழங்கத் தேவையான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான விலையை நிர்ணயிப்பதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மற்றும் தொலைத்தொடர்புத் துறை இடையே சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்டு ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவது மற்றும் நகர்ப்புறங்களில் இணைப்புக்கான கட்டணங்களை நீக்குவது போன்ற விவகாரங்களில் இரு அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இது தொடர்பான இறுதி முடிவை டிஜிட்டல் கம்யூனிகேஷன் கமிஷன் எடுக்கும். அதன் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.

Advertisement

தொடக்கம்

எப்போது தொடங்கும்?

நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்தியாவில் சேட்டிலைட் இணையச் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும். இது மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தச் சேவை தொடங்கப்பட்டால், இந்தியாவின் குக்கிராமங்கள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளிலும் அதிவேக இணைய வசதி தடையின்றிக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement