LOADING...
செயற்கைக்கோள் இன்டர்நெட் புரட்சி: சோதனை ஓட்டத்தை அடுத்து ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்த தீவிரம்
சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து ஸ்டார்லிங்க் சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம்

செயற்கைக்கோள் இன்டர்நெட் புரட்சி: சோதனை ஓட்டத்தை அடுத்து ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்த தீவிரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
07:13 pm

செய்தி முன்னோட்டம்

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடிவெடுத்துள்ளார். இந்த அறிமுகத்திற்கு முன்னதாக, அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மும்பையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இன்டர்நெட் சேவை தொடர்பான செயல் விளக்கப் பரிசோதனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தனது செயல்பாடுகளுக்கான மையமாக மும்பையை ஸ்டார்லிங்க் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்பையின் சண்டிவாலி பகுதியில் சுமார் 1,294 சதுர அடி பரப்பளவில் அலுவலகத்திற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ₹2.33 கோடிக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

அறிமுகம்

செயற்கைக்கோள்கள் மூலம் இன்டர்நெட் சேவையின் அறிமுகம்

இது செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் இன்டர்நெட் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஸ்டார்லிங்கின் முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கையாகும். தொடக்கத்தில், ஸ்டார்லிங்க் நிறுவனம் மும்பை, நொய்டா, சண்டிகர், கொல்கத்தா மற்றும் லக்னோ உள்ளிட்ட இந்திய நகரங்களில் ஒன்பது கேட்வே நிலையங்களை அமைத்துச் செயற்கைக்கோள் சிக்னல்களை நாட்டின் பல்வேறு பயனர்களுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்டார்லிங்க் தற்போது 7,578 செயற்கைக்கோள்களைக் கொண்ட ஒரு பெரிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் சாட்காம் (Satcom) ஆப்பரேட்டராக உள்ளது. ஸ்டார்லிங்க் இந்திய அரசாங்கத்திடமிருந்து முழுமையான ஒப்புதல்களைப் பெற்றவுடன், அது ஏற்கனவே சந்தையில் உள்ள யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) மற்றும் ஜியோ சேட்டிலைட் (Jio Satellite) போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்.