LOADING...
தலைக்கு மேல் சுற்றும் விண்வெளிக் கழிவுகள்; ஜிபிஎஸ் முதல் போன் வரை முடங்கும் அபாயம்
விண்வெளி குப்பைகளால் பூமிக்கு ஆபத்து

தலைக்கு மேல் சுற்றும் விண்வெளிக் கழிவுகள்; ஜிபிஎஸ் முதல் போன் வரை முடங்கும் அபாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 17, 2026
07:17 pm

செய்தி முன்னோட்டம்

விண்வெளி என்பது ஒரு காலத்தில் ஆய்வாளர்களுக்கு மட்டுமே உரிய இடமாக இருந்தது. ஆனால், இன்று அது பழைய செயற்கைக்கோள்கள், உடைந்த ராக்கெட் பாகங்கள் மற்றும் உலோகத் துண்டுகள் நிறைந்த ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது. தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 12,000 செயல்படும் செயற்கைக்கோள்கள் உள்ளன. 2030 களின் தொடக்கத்தில் இது 40,000 க்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செயற்கைக்கோள் ஏவுதலும் இந்த விண்வெளி குப்பைகளின் (Space Debris) அளவை மேலும் அதிகரித்து வருகிறது.

பாதிப்புகள்

கெஸ்லர் சிண்ட்ரோம் (Kessler Syndrome) மற்றும் பாதிப்புகள்

விண்வெளியில் குப்பைகள் அதிகரிக்கும் போது, அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். ஒரு மோதல் நிகழ்ந்தால், அது சங்கிலித் தொடர் போலப் பல செயற்கைக்கோள்களைச் சிதைத்து, லட்சக்கணக்கான சிறிய துகள்களை உருவாக்கும். இதை விஞ்ஞானிகள் 'கெஸ்லர் சிண்ட்ரோம்' என்று அழைக்கின்றனர். ஒரு சிறிய உலோகத் துண்டு கூட அதிவேகத்தில் பயணிக்கும் போது, விண்வெளி நிலையத்தின் ஜன்னலைத் துளைக்கும் அல்லது விண்வெளி வீரர்களின் உடைகளைச் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் தகவல் தொடர்பு, ஜிபிஎஸ் மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற சேவைகள் முடங்கக்கூடும்.

ஐரோப்பா

2030 க்ளீனிங் மிஷன்: ஐரோப்பிய விண்வெளி முகமையின் அதிரடி

விண்வெளியைச் சுத்தம் செய்ய ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) 'ஜீரோ டெப்ரிஸ் சார்ட்டர்' (Zero Debris Charter) என்ற உலகளாவிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. 2030 க்குள் பூமியின் சுற்றுப்பாதையைத் தூய்மையாக்குவதே இதன் இலக்காகும். இதற்காகப் புதிய செயற்கைக்கோள்களில் 'சுய அழிப்பு' (Self-destruct) வசதிகளை ஏற்படுத்துதல், பழைய செயற்கைக்கோள்களை விண்வெளியிலேயே பழுதுபார்த்தல் அல்லது எரிபொருள் நிரப்புதல் போன்ற நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், ரோபோக்கள், வலைகள் (Nets) மற்றும் லேசர் கருவிகளைப் பயன்படுத்தி விண்வெளிக் கழிவுகளைச் சேகரிக்கும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.

Advertisement

இந்தியா

பொருளாதார இழப்பு மற்றும் இந்தியாவின் பங்கு

விண்வெளி குப்பைகளால் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. 2030 க்குள் இது ஆண்டுக்கு 1 பில்லியன் டாலராக உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஒரு மிகப்பெரிய மோதல் ஏற்பட்டால், உலகளவில் சுமார் 200 பில்லியன் டாலர் வரை பாதிப்பு ஏற்படலாம். இந்தச் சவாலை எதிர்கொள்ள இஸ்ரோ உள்ளிட்ட உலகளாவிய விண்வெளி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன. விண்வெளிப் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்டங்கள் மற்றும் தரவுப் பகிர்வு அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement