ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!
இந்தியாவில் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்பாட்டோடு, ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும், இந்திய அரசும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து மோசடிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. புனேவைச் சேர்ந்த அம்ருத்கர் என்ற மென்பொறியாளர், ஆன்லைன் மோசடிக்கு ஆளாகி ரூ.12.85 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அம்ருத்கர், புனேயில் ஒர்க் ஃபிரம் ஹோம் செய்துகொண்டிருக்கிறார். அதோடு, கூடுதல் வருமானத்திற்காக, பார்ட் டைம் வேலைக்காக இணையத்தில் வாய்ப்புகளை தேடியிருக்கிறார். அதற்காக இணையத்தில் ஏதோ ஒரு பிரபலமற்ற தளத்தில், அளித்த தகவலைக் கொண்டு, மோசடி நபர் ஒருவர் அம்ருத்கரை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் மோசடி:
கூகுளில் பாஸிட்டிவ் ரிவ்யூக்களைப் பதிவு செய்தால், ஒரு பதிவுக்கு 150 ரூபாய் தருவதாக கூறியிருக்கிறார் அந்த மோசடி நபர். அம்ருத்கரும் அதனை ஏற்றுக் கொண்டு, அந்த வேலையை செய்யத் தொடங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அம்ருத்கரின் நம்பிக்கையைப் பெற்ற மோசடி நபர், வேறு ஒரு வேலை இருக்கிறது. ஆனால், அதற்கு முதலில் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அந்த வேலை முடிந்த பிறகு பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார் அந்த மோசடி நபர். இதனை நம்பிய அம்ருத்கரிடம், ரூ.12.85 லட்சத்தை வாங்கிவிட்டு, அதனை திருப்பிக் கொடுக்கவும் மறுத்திருக்கிறார் அந்த மோசடி ஆசாமி. அதன் பின்புதான், தான் ஏமாந்தது அம்ருத்கருக்குப் புரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் அம்ருத்கர்.