இனி கோடிங் படிப்பவர்களுக்கு வேலை இருக்குமா? ஏஐ நிபுணர் சொல்வதைக் கேளுங்க
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், கோடிங் திறன் விரைவில் மதிப்பிழக்கும் என்ற கருத்து தொழில்நுட்பத் துறையில் அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஏஐ அமைப்பின் நிபுணர்களில் ஒருவரான ஜெஃப்ரி ஹின்டன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டத்தின் மதிப்பு இன்றும் தொடர்கிறது என்று வலியுறுத்தி உள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் என்பது வெறும் கோடிங் மட்டுமல்ல என்று ஹின்டன் வலியுறுத்தினார். "ஒரு திறமையான மிட்-லெவல் புரோகிராமராக இருப்பது நீண்ட காலத்திற்கு ஒரு தொழிலாக இருக்காது. ஏனெனில் ஏஐ அந்த வேலையைச் செய்ய முடியும்." என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் வழங்கும் கணிதம், புள்ளிவிவரங்கள் மற்றும் நேரியல் இயற்கணிதம் போன்ற திறன்கள் எப்போதும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பார்வை
பிற தொழில்நுட்பத் தலைவர்களின் பார்வை
கோடிங் கற்றலை, ஒரு கலைக் கல்லூரி மாணவர் லத்தீன் மொழியைக் கற்பதற்கு ஒப்பிட்ட ஹின்டன், "நீங்கள் லத்தீன் பேசப் போவதில்லை என்றாலும், அதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளது." என்று கூறினார். அதேபோல, ஏஐ எல்லா கோடிங்கையும் செய்தாலும், கோடிங் கற்றுக் கொள்வது மிகவும் பயனுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாடெல்லாவும் இதையொத்த கருத்தையே கொண்டுள்ளார். மென்பொருள் உருவாக்குவதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது இன்றும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், என்விடியா சிஇஓ ஜென்சென் ஹுவாங் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டுள்ளார். இனி மாணவர்கள் கோடிங் கற்க வேண்டியதில்லை என்றும், அதற்குப் பதிலாக உயிரியல் அல்லது விவசாயம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.