அடோப் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகிய சாந்தனு நாராயண்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோப் (Adobe), அதன் நீண்டகால தலைமைச் செயல் அதிகாரி சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தது. ஹைதராபாத்தில் பிறந்த இவர், 2007-ம் ஆண்டு முதல் அடோப் நிறுவனத்தை வழிநடத்தி வந்தார். சாந்தனு நாராயணின் 18 ஆண்டுகால தலைமையில், அடோப் நிறுவனம் ஒரு சாதாரண மென்பொருள் விற்பனை நிறுவனத்திலிருந்து, சந்தா முறையிலான மாபெரும் கிளவுட் (Cloud) நிறுவனமாக உருவெடுத்தது. இவரது காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 1 பில்லியன் டாலரிலிருந்து 25 பில்லியன் டாலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, போட்டோஷாப் (Photoshop), இல்லஸ்ட்ரேட்டர் (Illustrator) போன்ற மென்பொருள்களை உள்ளடக்கிய 'கிரியேட்டிவ் கிளவுட்' அம்சத்தை அறிமுகப்படுத்தியது இவரது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
அடோபி
விலகலுக்கான காரணம்
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மென்பொருள் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அடோப் நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல புதிய தலைமை தேவை எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சாந்தனு நாராயண் உடனடியாக விலகாமல், புதிய சிஇஓ தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பார். அதன் பிறகு, அவர் Chair of the Board ஆக தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது விலகல் செய்தி வெளியானதும் அடோப் பங்குகள் சந்தையில் சிறு சரிவைச் சந்தித்தன. அடுத்த சில மாதங்களில் அடோப் நிறுவனத்தின் புதிய தலைமை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.