இருண்ட பொருளே இல்லாத விண்மீன் மண்டலத்தைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்
இந்தப் விண்வெளியின், பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான பகுதிகளை இருண்ட பொருளே (Dark Matter) நிரப்பியிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். அதாவது, இந்தப் பேரண்டமானது 85% இருண்ட பொருளாலேயே ஆகியிருக்கின்றது என்றும், இருண்ட பொருள் இல்லாத இடமே இல்லை எனவும் கருதி வந்தனர். ஆனால், தற்போது இருண்ட பொருளே இல்லாத ஒரு விண்மீன் மண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இது, இதுவரை இந்த அண்டத்தைப் பற்றி அறிவியல் கொண்டிருக்கும் புரிதலுக்கு சவாலாக வந்தமைந்திருக்கிறது. பூமியில் இருந்து சுமார் 240 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் NGC 1277 என்ற விண்மீன் மண்டலமானது, பெரசஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த NGC 1277 விண்வெளி மண்டலமானது, நமது பால்வெளி மண்டலத்தின் அளவே இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இருண்ட பொருளே இல்லாத விண்மீன் மண்டலம்:
இந்த NGC 1277 விண்மீன் மண்டலமானது, தன்னைச் சுற்றியிருக்கும் எந்த பிரபஞ்ச பொருளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் வலம் வந்து கொண்டிருப்பது தான் விஞ்ஞானிகளை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. இந்த விண்மீன் மண்டலத்தில் இருண்ட பொருளே இல்லாமல் இருப்பதற்கு இரண்டு சாத்தியக்கூறுகளை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒன்று, சுற்றியிருக்கும் பிரபஞ்ச பொருட்களுடனான தொடர்பில், தன்னிடமிருந்த இருண்ட பொருளை இந்த விண்மீன் மண்டலம் இழந்திருக்க வேண்டும் அல்லது இரு விண்மீன் மண்டலங்கள் மோதிக் கொள்ளும் நிகழ்வில் இதில் இருந்த இருண்ட பொருள் இந்த விண்மீன் மண்டலத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டும். இவற்றில் எது நிகழ்ந்திருக்கலாம் என அறிந்து கொள்ள, ஸ்பெயினில் இருக்கும் கேனேரி தீவுகளில் உள்ள வில்லியம் ஹெர்செல் தொலைநோக்கியைக் கொண்டு, NGC 1277-ஐ ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்கின்றனர்.