எலிகளின் மூளையில் மனித செல்கள்! நரம்பியல் துறையில் மருத்துவப் புரட்சி; மனநல நோய்களுக்குத் தீர்வு காண புதிய வழி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள், எலிகளின் மூளையில் மனித நரம்பு செல்களை வெற்றிகரமாக பொருத்தி, அவற்றை செயல்பட வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க மருத்துவ சாதனையை படைத்துள்ளனர். நேச்சர் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சிக்கலான மனநல மற்றும் நரம்பியல் நோய்களுக்குத் தீர்வு காண்பதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
புதிய வழி
சிக்கலான மூளைக் கோளாறுகளுக்குத் தீர்வு காணப் புதிய வழி
மனித மூளை என்பது கோடிக்கணக்கான செல்களாலும், மில்லியன் கணக்கிலான நரம்பு இணைப்புகளாலும் ஆனது.
இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் வலிப்பு, ஆட்டிசம், மூளை முடக்கம் மற்றும் மனசிதைவு போன்ற நோய்களின் தன்மையை சாதாரண ஆய்வக எலிகளில் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்து வந்தது.
"மனநல அறிவியல் துறையில் நடத்தப்படும் பல மருத்துவப் பரிசோதனைகள் தோல்வியடைகின்றன.
எலிகளில் வெற்றிகரமாக செயல்படும் மருந்துகள் மனிதர்களிடம் பலனளிப்பதில்லை.
அதற்கு மனித உயிரியலின் தனித்துவமான செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாததே முக்கியக் காரணம்." என்று இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் செர்கியூ பாஸ்கா தெரிவித்துள்ளார்.
மனித செல்கள்
ஆய்வக எலிகளில் மனித செல்கள் எவ்வாறு வளர்க்கப்பட்டன?
விஞ்ஞானிகள் முதலில் மரபணு மாற்றம் மூலமாக எலிகளின் மூளையில் செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படும் சாம்பல் நிறப் பகுதி உருவாவதைத் தடுத்தனர்.
இதுவே உயர் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் வெளி அடுக்காகும்.
அதன்பின்னர், மனிதர்களின் தோலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை மறுசுழற்சி செய்து, ஆர்கனாய்டுகள் எனப்படும் சிறிய மூளைத் திசுக்களாக ஆய்வகத்தில் வளர்த்தெடுத்தனர்.
இந்தத் திசுக்கள் எலிகளின் மூளையில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டபோது, அவை எலியின் நரம்பு மண்டலம் மற்றும் தண்டுவடத்துடன் தங்களை வெற்றிகரமாக இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கின.
விஞ்ஞானம்
நெறிமுறைக் கேள்விகளும் விஞ்ஞானிகளின் விளக்கமும்
மனித செல்கள் பொருத்தப்பட்டதால் இந்த எலிகள் மனிதர்களைப் போல சிந்திக்கும் எலிகளாக மாறாது என்றும், வழக்கமான எலிகளைப் போலவே இயல்பாக நகர்ந்து செயல்படுகின்றன என்றும் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், கடுமையான அறிவியல் நெறிமுறைக் குழுக்களின் கண்காணிப்பிலேயே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இது எலிகளின் உடலை ஒரு இயற்கை வளர்ச்சிப் பெட்டகமாக பயன்படுத்தி மனித மூளை செல்களைப் புரிந்துகொள்ளும் புதிய பாதையை உருவாக்கியுள்ளது.