
AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா
செய்தி முன்னோட்டம்
1990-களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சியுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒப்பிட்டிருக்கிறார் மைக்ரோசஃப்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா.
சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா, அந்த நிகழ்வில் தன்னுடைய இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1995-க்குப் பிறகு இந்த உலகத்தை இணையத்தின் வளர்ச்சி எந்தளவு மாற்றியதோ, அதோ போல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் இந்த உலகைப் புரட்டிப்போடும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
மேலும், 1995 டாட் காம் காலக்கட்டத்தின் போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடிதத்தில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தையும் தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் அவர்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மைக்ரோசாஃப்டின் முதலீடு:
கடந்த ஆண்டு நவம்பரில் உலகளவில், தங்களுடைய புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான சாட்ஜிபிடியை வெளியிட்டது அமெரிக்காவின் ஓபன்ஏஐ நிறுவனம்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடங்கியதுடன், தங்களுடைய AI கருவிகளையும் வெளியிட்டிருக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், AI தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. முக்கியமாக, ஓபன்ஏஐ-யின் GPT LLM மற்றும் அதனைப் பயன்படுத்தும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டிலும் 13 பில்லியன் டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
அதுமட்டுமின்றி, ஓபன்ஏஐ-யின் மேம்படுத்தப்பட்ட LLM ஆன GPT-4யே மைக்ரோசாஃப்டின் பிங் AIயும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.