அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா!
விண்வெளி நமது சூரிய கோள்களில் ஒன்றான சனி தனித்தன்மையை உடைய ஒரு கோள். சனி கோள் மட்டுமே தன்னைச் சுற்றி வளையங்களைக் கொண்டது. அந்த வளையங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்தக் கோளானது தன்னைச் சுற்றி ஏழு வளையங்களைக் கொண்டிருக்கிறது. A, B, C, D, E, F மற்றும் G எனப் பெயரிடப்பட்ட அந்த ஏழு வளையங்களில் A, B மற்றும் C ஆகிய பெரிய வளையங்கள் முதன்மையான வளையங்களாகக் கருதப்படுகின்றன. வால்நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் துணைக்கோள்களின் உடைந்த பாகங்கள் சனியின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படும், அந்தக் கோளின் வளையமாக உருவாகியிருக்கின்றன. அதே புவியீர்ப்பு விசையாலேயே அந்த வளையம் அழிந்துவருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன நடக்கிறது?
1980 முதலே சனி கோளின் உள்வளையத்தில் உள்ள பனிக்கட்டிகள் மற்றும் பாறைகள் அந்தக் கோளின் மேல் வளிமண்டலத்தில் தொடர்ந்து விழுந்து வருகின்றன. இதனை காசினி திட்டத்தில் தாங்கள் அனுப்பிய ஆய்வுக்களத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். ஒவ்வொரு நொடிக்கும் 400 கிலோ முதல் 2,800 கிலோ வரையிலான பனிக்கட்டி மழை சனி கோளில் விழுந்து அந்தக் கோளையும் வெப்பமாக்குவதாகக் கண்டறிந்திருக்கின்றனர். எனவே, சனி கோளில் இருந்து 2,82,000 கிமீ தூரத்திற்கு படர்ந்து நீண்டிருக்கும் அக்கோளின் வளையத்தைக் கண்காணிக்கவும், அது குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை அக்கோளை நோக்கி திருப்பி ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டிருக்கிறது நாசா.