லூனா-25ன் தோல்வியைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஷ்யா விஞ்ஞானி
47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா செயல்படுத்திய நிலவுத் திட்டமான லூனா 25வானது நேற்று நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத கோளாறு காரணமாக நிலவில் மோதியது. ரஷ்யாவின் இந்த நிலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அறிந்த சில மணி நேரங்களிலேயே, அத்திட்டத்தின் பணியாற்றிய 90 வயதான மூத்த இயற்பியலாளரான மிக்கெய்ல் மரோவ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். லூனா 25 திட்டம் தோல்வியடைந்ததே தன்னுடைய உடல் நலம் குன்றியதற்கான காரணம் என மருத்துவமனையில் இருந்தவாறே ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அவர்.
நொறுங்கிய ரஷ்யாவின் கனவு:
சோவியத் யூனியனாக இருந்து பிரிந்த பிறகு, சுயமாக நிலவுத் திட்டத்தை செயல்படுத்தும் ரஷ்யாவின் முதல் முயற்சி இது. அப்படி இருக்கும் நிலையில், "தன்னைப் பொறுத்தவரை ரஷ்யாவின் நிலவுத் திட்டத்தை மீட்டெடுக்கும் கடைசி முயற்சி இது." எனத் தெரிவித்திருக்கிறார் மிக்கெய்ல். மேலும், இந்தத் திட்டம் தோல்வியடைந்தது குறித்து ஆராய்ந்து சிறந்த தீர்வைக் காண்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். தொழில்நுட்ப ரீதியில் என்ன விதமான பிரச்சினை ஏற்பட்டு, இந்த லூனா 25 தோல்வியடைந்தது என்பது குறித்த விபரங்களை ரஷ்யாவின் விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் வெளியிடாத நிலையில், இந்தத் தோல்வி குறித்து விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறது.