தோல்வியில் முடிந்த ரஷ்யாவின் லூனா 25 நிலவுத் திட்டம்
ரஷ்யாவின் லூனா 25 விண்கலமானது நிலவில் மோதியதால், 47 ஆண்டுகளுக்குப் பின் அந்நாடு செயல்படுத்திய விண்வெளித் திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்திய நேரப்படி நேற்று மாலை 5.27 மணியளவில் லூனா 25 விண்கலத்துடனான தொடர்பை ரஷ்யா இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறக்கத்திற்கு முன்னாள், நிலவுக்கு அருகிலுள்ள சுற்று வட்டப்பாதையில் லூனா 25ஐ நுழைக்க மேற்கொள்ளப்பட்ட டீபூஸ்டிங் நடவடிக்கையின் போது இந்த தொடர்பு இழப்பு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூமியுடனான தொடர்பை இழந்த பிறகு, அந்த விண்கலம் நிலவில் மோதியிருப்பதாகத் தெரிவித்துள்ளது ரஷ்ய விண்வெளி அமைப்பு.
தோல்வியில் முடிந்த ரஷ்ய நிலவுத் திட்டம்:
1957ல், பூமியின் சுற்று வட்டப்பாதையில் வலம் வரும் வகையிலான 'ஸ்புட்னிக் 1' என்ற முதல் செயற்கைக்கோளை ஏவியதும், 1961ல் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியதும் ரஷ்யா தான். அப்போதைய காலக்கட்டத்தில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு விண்வெளித்துறையில் முன்னணியில் இருந்த நாடு ரஷ்யா. 1976லேயே கடைசியாக தங்களுடைய லூனா 24 என்ற நிலவுத் திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், அப்போது தனித்தனியாக சிதறாமல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்தது. சோவியத் யூனியன் கூட்டமைப்பு சிதறிய பிறகு, கடைசி நிலவுத் திட்டத்திற்கு 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவுத் திட்டம் இதுவே. தற்போது இதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது ரஷ்யா.