நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை தற்போது நிலநடுக்கத்தைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலநடுக்கங்களைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு வழிமுறை (AI Algorithm) ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். இந்த வழிமுறையை கடந்த ஏழு மாதங்களாகப் பரிசோதனை முறையில் சீனாவில் ஏற்படும் நிலநடுக்கங்களைக் கண்டறியவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தப் பரிசோதனையின் போது நிலநடுக்கம் குறித்த தகவல்களை 70% சரியாக அளித்திருக்கிறது மேற்கூறிய AI வழிமுறை. நிலநடுக்கம் ஏற்படவிருக்கும் இடத்திலிருந்து 200 மைல்களுக்குள்ளான தொலைவில் நிலநடுக்கத்தைக் கணித்திருக்கிறது இந்த AI வழிமுறை. மேலும், குறிப்பிட்ட நிலநடுக்கமானது எத்தனை வலிமையுடயதாக இருக்கும் என்பதையும் சரியாக கணித்திருக்கிறது.
எதன் அடிப்படையில் நிலநடுக்கங்கள் உருவாவதைக் கணிக்கிறது இந்த AI வழிமுறை?
ஐந்து ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட நில அதிர்வுகள் குறித்த தகவல்களின் அடிப்படையில், ஒரு இடத்தில் நிலநடுக்கம் ஏற்படவிருப்பதை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கணிக்கிறது இந்த AI வழிமுறை. நிகழ் நேர நில அதிர்வுத் தகவலையும், கடந்த கால நில அதிர்வுத் தகவலையும் ஒப்பிடும் நிலநடுக்கும் ஏற்படவிருப்பது குறித்து எச்சரிக்கை செய்கிறது. ஆனால், இந்தப் பரிசோதனை காலத்தில் எட்டு முறை தவறான எச்சரிக்கைகளையும் வழங்கியிருக்கிறது இந்த AI வழிமுறை. அதிக நிலநடுக்கம் ஏற்படும் இடங்களில், கூடுதல் தகவல்களை அளித்து மேம்படுத்திப் பரிசோனதை செய்வதன் மூலம், மேலும் துல்லியமாக நிலநடுக்கத்தைக் கணிக்கும் வகையில் இந்த AI வழிமுறையை மேம்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்கள் இந்த நிலநடுக்க எச்சரிக்கை செயற்கை நுண்ணறிவு வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்.