பூமியைத் தாக்கியது சக்திவாய்ந்த சூரியப் புயல்: தகவல் தொடர்பு பாதிப்படைய வாய்ப்பு
இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்கியது. இதனால், டாஸ்மேனியாவிலிருந்து பிரிட்டன் வரை வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகளைப் பார்க்க முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், இது இந்த வார இறுதி முழுவதும் தொடர்ந்தால், தொலை தொடர்பு, மொபைல் போன் சிக்கனல்கள் போன்றவற்றில் இடையூறு ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின்(NOAA) விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின்படி, சூரியனில் இருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை வெளியேற்றும் பல கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள்(CMEs) வெளியாகியுள்ளன.
அக்டோபர் 2003இல் ஏற்பட்ட ஹாலோவீன் புயல்கள்
அதில் முதலாவது சூரியப் புயல் 1600 GMTக்குப் பிறகு பூமியை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பின்னர் ஒரு "தீவிர" புவி காந்த புயலாக மாறியது. அக்டோபர் 2003இல் "ஹாலோவீன் புயல்கள்" என்று அழைக்கப்படும் இதே போன்ற சூரிய புயல்கள் ஏற்பட்டன. இதனால், ஸ்வீடனில் மின்தடை ஏற்பட்டதுடன், தென்னாப்பிரிக்காவில் மின்சார உள்கட்டமைப்புகள் சேதமாகின. வரவிருக்கும் நாட்களில் மேலும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் பூமியை தாக்கும் என்றும், இதனால் தொலை தொடர்பு மற்றும் மின்சார க்ரிடுகள் பாதிப்படையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.