இந்தியாவில் 'போகோ பாட்ஸ்' ட்ரூலி வயர்லெஸ் ஏர்பட்ஸை வெளியிட்டுள்ளது போகோ
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மியின் துணை நிறுவனமான போகோ, இந்தியாவில் தங்களது முதல் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்களை வெளியிட்டிருக்கிறது. 'போகோ பாட்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த இயர்போன்களின் விற்பனையானது தற்போது ஃப்ளிப்கார்ட் தளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த பிற நிறுவனங்களான, ஓப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மீ ஆகிய நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனையைக் கடந்து பிற மின்னணு சாதனங்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக இருக்கும் வகையிலும், இந்தியாவில் தங்களது சந்தையை விரிவுபடுத்தும் வகையிலும், தற்போது பட்ஜெட் விலையிலான இந்த புதிய போகோ பாட்ஸ் இயர்பட்ஸ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
என்னென்ன வசதியுடன் வெளியாகியிருக்கிறது போகோ பாட்ஸ்:
தடையற்ற கனெக்டிவிட்டிக்காக ப்ளூடூத் 5.3 வசதியும், நல்ல ஒலியமைப்பிற்காக 12மிமீ பாஸ் டிரைவரும் புதிய போகோ பாட்ஸில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கேஸூடன் 30 மணி நேர பேட்டரி லைஃபை வழங்கும் இந்த போகோ பாட்ஸை 1.5 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்து விட முடியும். மேலும், 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 1.5 மணி நேர பேட்டரியையும் கொடுக்கிறது. டைப் சி யுஎஸ்பி, கேமிங்கிற்கு 60மிநொ லேட்டன்சி, கூகுள் ஃபாஸ்ட் பேர், வெளியிலிருந்து வரும் சத்தத்தைக் குறைக்க Environmental Noise Cancellation வசதி மற்றும் டச் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ட்ரூலி வயர்லெஸ் போகோ பாட்ஸை ரூ.1,199 விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போகோ.