நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!
உலகில் நெகிழி மாசுபாட்டைக் (Plastic Pollution) குறைப்பதற்கான புதிய திட்டங்கள் சிலவற்றை தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. அதனைப் பின்பற்றுவதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 80% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. இந்த இலக்கை அடைவதற்கு உலக நாடுகளும், நெகிழி தொழில்துறையும் தங்களுடைய கொள்கைகளிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழ்கடல் தொடங்கி உயரமான மலை வரை, காற்றில் கூட நுண்துகள்களாக நெகிழி கலந்திருக்கிறது. உலகில் உருவாக்கப்படு நெகிழிப் பொருட்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைவான வாழ்நாளைக் கொண்டவையாக இருக்கிறது. மேலும், விரைவாகவே அவை குப்பையில் சேர்கின்றன. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஓரளவு தீர்க்க தங்களுடைய அறிக்கையில் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.
என்ன வழிமுறைகள்?
மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறுசீரமைப்பு என மூன்று திட்டங்களைக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா அமைப்பு. தண்ணீர்க் குப்பி உள்ளிட்ட மீண்டும் பயன்படுத்த முடிந்த வகையிலான நெகிழிப் பொருட்களை மறுபயன்பாடு செய்வதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 30% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும். நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்குச் தேவையான வழிமுறைகளை அரசு வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 20-50% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும். குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட ஷாம்பு பாக்கெட்டுகள், காபித்தூள் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் நெகிழிக்குப் பதிலாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் 17% நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும். இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் 7,00,000 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.