UPI சேவையை எளிதாக்கும் UPI Lite வசதி.. போன்பேயிலும் அறிமுகமானது!
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய யுபிஐ லைட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது போன்பே நிறுவனம். இந்த யுபிஐ லைட் வசதியை இந்தியாவின் NPCI வடிவமைத்தது. இந்த வசதியினை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கிய வெளியிட்டது. இந்த புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தங்களது செயலியில் அறிமுகப்படுத்திய நிலையில், போன்பே நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த யுபிஐ லைட் வசதியின் மூலம், யுபிஐ பயனர்களின் பயன்பாட்டு அனுபவம் மேம்படும் என்றும், பரிவர்த்தைனைகள் தோல்வியடைவது குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன்பே செயலியை அப்டேட் செய்து பயனர்கள் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம். சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்காகவே முக்கியமாக இந்த யுபிஐ லைட் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
முதலில் போன்பே செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அந்த செயலியின் முகப்புப் பக்கத்தில் யுபிஐ லைட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான அளவு பணத்தை டைப் செய்து, உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து, யுபிஐ பின்னை டைப் செய்து யுபிஐ லைட் கணக்கில் பணத்தை சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவு தான், இனி 200 ரூபாய்க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ லைட் மூலமே கட்டணம் செலுத்திக் கொள்ள முடியும். அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை நம்முடைய யுபிஐ லைட் கணக்கில் வைத்துக் கொள்ள முடியும். மேலும், தினசரி எத்தனை யுபிஐ லைட் பரிவர்த்தனைகளை நாம் செய்திருக்கிறோம் என்பது குறித்த தகவல்கள் தினசரி குறுஞ்செய்தியாக நமது மொபைலுக்கு அனுப்பப்பட்டுவிடுமாம்.