புற்றுநோய் இல்லாத உலகம் சாத்தியமா? கணையப் புற்றுநோயை வேரோடு அழித்த புதிய சிகிச்சை முறை; விஞ்ஞானிகள் சாதனை
செய்தி முன்னோட்டம்
மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர். ஆய்வகத்தில் எலிகளின் மீது நடத்தப்பட்ட சோதனையில், ட்ரிபிள் காம்பினேஷன் தெரபி (Triple Combination Therapy) என்ற மூன்று மருந்துகள் இணைந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி, புற்றுநோய்க் கட்டிகளை முற்றிலும் மறைந்துபோகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பம்
மருந்து எதிர்ப்புத் திறனை முறியடித்த தொழில்நுட்பம்
பொதுவாக கணையப் புற்றுநோய்க்கான மருந்துகள் சில மாதங்களிலேயே தனது வீரியத்தை இழந்துவிடும். ஏனெனில், புற்றுநோய்க் கட்டிகள் அந்த மருந்துகளுக்கு எதிராகத் தற்காப்புத் திறனை வளர்த்துக்கொள்ளும். ஆனால், ஸ்பெயின் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் மரியானோ பார்பசிட் தலைமையிலான குழுவினர், இந்தத் தடையை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்துடன், புரதச் சிதைப்பான் உள்ளிட்ட மூன்று கூறுகளை இணைத்து இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் போது எலிகளுக்கு எவ்விதமான பெரிய பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள்
மனிதர்களுக்கான சிகிச்சை எப்போது?
இந்த ஆய்வு முடிவுகள் PNAS (Proceedings of the National Academy of Sciences) என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. எலிகள் மீதான சோதனையில் 100% வெற்றி கிடைத்திருந்தாலும், மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. "இதுவரை புற்றுநோய் ஆராய்ச்சியில் இத்தகைய முடிவுகள் கிடைத்ததில்லை. இருப்பினும், இப்போதே மனிதர்களுக்கு இந்தச் சிகிச்சையை வழங்க முடியாது. அதற்கு இன்னும் சில காலமாகும்." என்று டாக்டர் பார்பசிட் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய்க்கு எதிரான போரில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், நிரந்தரத் தீர்வை வழங்கவும் ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது.