
தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு: ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனங்களில் நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில்நுட்பத் துறையில் தொடரும் வேலைவாய்ப்புக் குறைப்பு அலை, இன்னும் குறையவில்லை. இந்த வாரத்தில் ஆரக்கிள் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற மென்பொருள் ஜாம்பவான்கள், கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. மாநில ஒழுங்குமுறை அமைப்புகளிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின்படி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 500 க்கும் மேற்பட்ட வேலைகளையும், சியாட்டில் பகுதியில் கிட்டத்தட்ட 200 வேலைகளையும் இந்த இரண்டு நிறுவனங்களும் நீக்கியுள்ளன. சேல்ஸ்ஃபோர்ஸ் சான் பிரான்சிஸ்கோவில் 262 வேலைகளையும், ஆரக்கிள் ரெட்வுட் சிட்டி, ப்ளெசண்டன் மற்றும் சாண்டா கிளாராவில் 254 வேலைகளையும் நீக்கியுள்ளன. இந்த நீக்கங்கள் நவம்பர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி நீக்கம்
பணி நீக்கத்தின் காரணம்
இந்த பணி நீக்கங்கள் கலிபோர்னியாவுக்கு மட்டும் அல்ல. சியாட்டில் பகுதியில் சேல்ஸ்ஃபோர்ஸ் 93 பணியாளர்களையும், ஆரக்கிள் 101 பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும், இந்த நடவடிக்கைகளை நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைத்து, வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளன. இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள பணிநீக்கங்களுக்குப் பின்னால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகப்படியான பணியமர்த்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) உள்கட்டமைப்பு செலவுகள் அதிகரித்தது போன்ற காரணங்கள் உள்ளன. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டும் கடந்த மே மாதத்திலிருந்து உலக அளவில் 15,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அதேசமயம் ஏஐயில் $80 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.