இனி நெட்வொர்க் இல்லனாலும் கவலையே இல்ல! இன்டர்நெட் இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்! என்பிசிஐயின் புதிய அம்சம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே யுபிஐ மூலம் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்ப வசதியை இந்திய தேசிய கட்டண நிறுவனம் (என்பிசிஐ) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. 'Near Field Communication' (NFC) தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த அம்சம், மொபைல் நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் சிரமமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.
தொழில்நுட்பம்
UPI Lite வேலட் மூலம் இயங்கும் புதிய அமைப்பு
இந்த புதிய ஆஃப்லைன் செலுத்தல் முறை யுபிஐ லைட் வேலட் கட்டமைப்பின் கீழ் செயல்பட உள்ளது.
பயனர்கள் இணைய வசதி இருக்கும் போது தங்களது யுபிஐ லைட் வேலட்டில் பணத்தை ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடைகளில் உள்ள சான்றளிக்கப்பட்ட PoS (Point of Sale) இயந்திரங்களில் தங்களது NFC வசதி கொண்ட ஸ்மார்ட்போனை Tap செய்வதன் மூலம் பணத்தை செலுத்த முடியும்.
இதற்காக பயனர்கள் யுபிஐ பின் எதையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை.
வரம்பு
அதிகபட்சமாக ₹2,000 வரை பரிவர்த்தனை வரம்பு
இந்த ஆஃப்லைன் முறையைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹2,000 வரை பணம் செலுத்த முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி மெட்ரோ நிலையங்கள், விமானங்கள், தொலைதூரக் கிராமங்கள் மற்றும் திடீர் நெட்வொர்க் முடக்கம் ஏற்படும் இடங்களில் இந்த வசதி பொதுமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.
வியாபாரிகள் இந்த சேவையை வழங்க என்பிசிஐ அமைப்பிடமிருந்து தங்கள் PoS இயந்திரங்களுக்கு உரிய சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமாகும்.
பொருளாதாரம்
இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல்
சிறு வணிகர்கள், பயணிகள் மற்றும் தினசரி பேருந்து/ரயில் பயணிகளுக்கு இந்த NFC ஆஃப்லைன் கட்டண முறை மிகப்பெரிய பலனைத் தரும்.
தற்போது என்பிசிஐ இந்த தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் மற்றும் PoS இயந்திரங்களுக்கான சான்றளிப்புப் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் செயலிகளில் இந்த NFC Tap-To-Pay ஆஃப்லைன் வசதி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.