விண்வெளியில் அணு ஆயுதத்தை நிலைநிறுத்த ரஷ்யா திட்டம்: ஜெர்மனி உளவுத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு இறுதிக்குள் அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் 'ஸ்புட்னிக்-எஸ்' (Sputnik-S) செயற்கைக்கோளை ரஷ்யா விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தக்கூடும் என ஜெர்மனி உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜெர்மனி ஊடகங்கள் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், மாஸ்கோ அருகே தயார் நிலையில் உள்ள இந்தச் செயற்கைக்கோள் அடுத்த 60 நாட்களுக்குள் ஏவப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுக்கும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் ரகசிய அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ கண்டனம்
விண்வெளிப் பாதுகாப்பில் சமரசம் இல்லை என நேட்டோ உறுதி
இந்த விவகாரம் குறித்துத் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிடும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், சூழலை எவ்வளவு தூரம் மோசமாக்க ரஷ்யா தயாராக உள்ளது என்பதை இது காட்டுவதாகவும் மெர்ஸ் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மார்க் ரூட்டே, விண்வெளிப் பகுதி உட்பட நேட்டோவின் ஒவ்வொரு அங்குலப் பாதுகாப்பையும் தாங்கள் உறுதி செய்வோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா
ஜெர்மனி உளவுத்துறையின் எச்சரிக்கையை மறுத்த ரஷ்யா
மேற்கத்திய நாடுகளின் இந்த எச்சரிக்கைகளை ரஷ்யா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பெர்லினில் உள்ள ரஷ்யத் தூதரகமும் இத்தகவலை மறுத்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், இது ரஷ்யாவுக்கு எதிரான திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரம் என்றும் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது.
பேராபத்து
சர்வதேச ஒப்பந்தங்களை மீறுகிறதா ரஷ்யா?
பூமியின் சுற்றுப்பாதையில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதும், விண்வெளியில் அணுகுண்டு சோதனை நடத்துவதும் ரஷ்யா கையெழுத்திட்டுள்ள 1967-ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் மற்றும் 1963-ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்.
விண்வெளியில் அணு ஆயுத வெடிப்பு நிகழ்த்தப்பட்டால், தாழ்வான சுற்றுப்பாதையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு செயற்கைக்கோள்கள் செயலிழந்து தகவல் தொடர்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது.
இதற்கிடையே, உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதே சிறந்த பாதுகாப்பு உத்தரவாதம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.