விரைவில் வெளியாகும் புதிய மிட்ரேஞ்சு 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் தான் தங்களுடைய புதிய நத்திங் போன் (2) ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருந்தது நத்திங். தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் BIS சான்றிதழ் தளத்தில் A142 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த நத்திங் நிறுவனம் பதிவு செய்திருப்பதாகத் இணையத்தில் தகவல் கசிந்திருக்கிறது. மேலும், NT03 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய நத்திங் பேட்டரி குறித்த தகவல்களும் கசிந்திருக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போன் குறித்து முதன் முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் IMEI தளத்தின் மூலம் வெளியானது. தற்போது BIS சான்றிதழ் தளத்தின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நத்திங்
நத்திங்கின் புதிய ஸ்மார்ட்போன்:
தற்போது நத்திங் நிறுவனத்தின் இந்திய லைன்அப்பில் போன் (1) மற்றும் போன் (2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களே விற்பனையில் இருக்கின்றன.
போன் (2)வானது 40,000 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஃப்ளாக்ஷிப்பாக இருக்கும் நிலையில், மிட்ரேஞ்சில் விற்பனையில் இருக்கும் போன் (1)-னானது வெளியாகி இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகிறது.
எனவே, மிட்ரேஞ்சில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை நத்திங் வெளியிடும் திட்டத்தில் இருக்கலாம் என சமீபத்திய தகவல் கசிவுகளின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, போன் (2)-வில் உள்ள அம்சங்களை, மிட்ரேஞ்சு வசதிகளுடன் இணைத்து நத்திங் போன் (2a) என்ற புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.