
வட இந்திய காற்று மாசுபாட்டால் தென்னிந்தியாவிற்கும் பாதிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கடுமையான காற்று மாசுபாடு, இப்போது தென்னிந்திய மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் தென்னிந்தியப் பகுதிகளிலும் காற்றின் தரம் படிப்படியாகக் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். வட இந்தியாவில், குறிப்பாக டெல்லியில், காற்றின் தரத்தைக் கட்டுப்படுத்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது மற்றும் பழைய வாகனங்களைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த நச்சுக் காற்று நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தென் மாநிலங்களையும் பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு
ஆய்வில் வெளியான தகவல்
சென்னை ஐஐடி, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கேரளக் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் சலீம் அலி மூன்று ஆண்டுகள் நடத்திய ஆய்வின் தகவல், வளிமண்டல வேதியியல் மற்றும் இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆய்வின்படி, பூமியின் மேற்பரப்பில் இருந்து 1 முதல் 3 கிலோமீட்டர் உயரத்தில் நிலைத்திருக்கும் தூசித் துகள்கள், அப்பகுதியின் வெப்பநிலையை கிட்டத்தட்ட 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்துகின்றன. இதன் காரணமாகவே காற்றின் மாசுபாடு 60 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு மற்றும் கேரளா
குறிப்பாக, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்த மாசுபாடு ஒரு பெரிய சுற்றுச்சூழல் சவாலாக உருவாகியுள்ளது. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்குச் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை சென்னை ஐஐடி பேராசிரியர் சந்தன் சாரங்கி மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சஞ்சய்குமார் மேத்தா ஆகியோர் தலைமை தாங்கி நடத்தியது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் வளிமண்டலம் மற்றும் புவியியலில் இந்த மாசுபாட்டின் நீண்ட கால தாக்கத்தை அறியத் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக டாக்டர் சலீம் அலி தெரிவித்துள்ளார்.