சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி
"டிக்டாக் செயலியை இப்போதே தடை செய்ய வேண்டும், அதனால் நம் குழந்தைகளை மேலும் பாதிக்கப்படக்கூடாது" என்று நிக்கி ஹேலி கூறினார். சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி ஆபத்தானது என்று வர்ணித்த குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலி, இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் இந்த செயலியை தடை செய்துள்ளபோது, அதைச் செய்யும் கடைசி நாடாக அமெரிக்கா இருக்கமுடியாது என்றும் கூறியுள்ளார். ஐ.நாவுக்கான இந்திய-அமெரிக்க முன்னாள் அமெரிக்க தூதர் ஹேலி, ஃபாக்ஸ் நியூஸ் டவுன் ஹாலில் உரையாற்றியபோது,"அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சீனா அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது" என்று கூறினார். பல அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், TikTok மற்றும் பிற சமூக ஊடக தளங்கள், குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்கா இளைஞர்கள் டிக்டாக் செயலியில் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளனர்
2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட பியூ ரிசர்ச் தரவுகளின்படி, அமெரிக்காவில் உள்ள 18-29 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், டிக்டாக்கில் தொடர்ந்து செய்திகளைப் பெறுவதாகக் கூறியுள்ளனர். "இது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், உங்கள் தொலைபேசியில் அந்த பயன்பாடு இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். சீனா இப்போது உங்கள் நிதியைப் பார்க்க முடியும், இப்போது உங்கள் தொடர்புகள் யார் என்பதை அவர்களால் பார்க்க முடியும்". "நீங்கள் எதைக் கிளிக் செய்கிறீர்கள், ஏன் அதைக் கிளிக் செய்கிறீர்கள் என்பதை அவர்களால் பார்க்க முடியும். நீங்கள் எதை பார்க்கவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கலாம். மேலும் நீங்கள் கேட்பதையும் அவர்களே தீர்மானிக்கலாம். அதுதான் டிக்டாக்கின் ஆபத்தான பகுதி" என்று நிக்கி ஹேலி தெரிவித்தார்.