LOADING...
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
இ-பாஸ்போர்ட் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு

வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
04:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய இ-பாஸ்போர்ட், சர்வதேசப் பயண ஆவணங்களின் பாதுகாப்புத் தரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது, காகித அடிப்படையிலான பாஸ்போர்ட்டுகளில் உள்ள போலி கையொப்பம் மற்றும் ஆவண மோசடி போன்ற சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது.

அம்சங்கள்

முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்

இன்டர்லாக்கிங் ரிலீஃப் டின்ட்கள்: இது ஒரு சிக்கலான வடிவமைப்பு நுட்பமாகும். இதில், பாஸ்போர்ட்டின் பின்புல அச்சில் (Background Print), வெவ்வேறு வண்ணங்கள் அல்லது நிழல்கள் கொண்ட மெல்லிய கோடுகள் அல்லது வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும். இந்த நுட்பமானது, பாஸ்போர்ட்டைப் பிரதி எடுப்பது அல்லது ஸ்கேன் செய்வது போன்ற முயற்சிகளைத் தடுக்கும். நுண் எழுத்துக்கள் அடங்கிய இன்டர்லாக்கிங் வடிவங்கள்: பாஸ்போர்ட்டின் மேற்பரப்பில் உள்ள வடிவமைப்பு அம்சங்களுக்குள், மனிதக் கண்ணால் எளிதில் பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறிய எழுத்துக்கள் (Microletters) அல்லது உரை அச்சிடப்பட்டிருக்கும். இந்த எழுத்துக்களை Magnifying Glass உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். ஆவணச் சரிபார்ப்பு அதிகாரிகள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்வார்கள்.

செயல்பாடு

இ-பாஸ்போர்ட்டின் செயல்பாடு

புதிய இ-பாஸ்போர்ட்டில் மின்னணு சிப் (Electronic Chip) உட்பொதிக்கப்பட்டிருக்கும். இந்தச் சிப்பில், பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் தனிப்பட்ட தரவுகள், புகைப்படம் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் பாதுகாப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும். சர்வதேச விமான நிலையங்களில் உள்ள பாஸ்போர்ட் ஸ்கேனர்கள் இந்த சிப்பை எளிதில் படித்து, பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் அடையாளத்தை சில வினாடிகளில் உறுதி செய்யும். இது விமான நிலையங்களில் சரிபார்ப்பு செயல்முறையை வேகப்படுத்துவதுடன், தரவு மாற்றங்களை (Data Tampering) உடனடியாகக் கண்டறிய உதவும். மொத்தத்தில், இந்த புதிய இ-பாஸ்போர்ட் வெளியீடு, இந்தியப் பயண ஆவணங்களுக்கு சர்வதேச அளவில் அதிக பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் வழங்கவுள்ளது.