வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!
தற்போது வருமான வரி தாக்கல் செய்பவர்களைக் குறிவைத்து புதிய ஆன்லைன் மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது. பயனர்களின் மொபைலுக்கு குறிப்பிட்ட வங்கியில் இருந்து தகவல் அனுப்புவது போன்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது. அந்தக் குறுஞ்செய்தியில் வருமான வரி தாக்கல் செய்ய தாங்கள் அனுப்பியிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து தகவல்களைப் பூர்த்தி செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் குறித்து தெரிந்தவர்கள் கூட ஏமாறும் அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக அந்தக் குறுஞ்செய்திகளை வடிவமைத்திருக்கிறார்கள். நாம் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து நம்முடைய வங்கிக் கணக்கு எண், பான் எண் ஆகிய தகவல்களை அளிக்கும் போது, அதனை வைத்து நம்மிடம் இருந்து பணம் பறிக்கும் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மேலும், சில குறுஞ்செய்திகளில் வங்கியின் மொபைல் செயலி போல் தோற்றம் கொண்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க்குகளும் வருகிறதாம். அவற்றை கொண்டு பயனர்களின் தகவல்களை சேகரிக்கிறார்கள் மோசடி நபர்கள். எந்த வங்கியும் தங்களுடைய பயனர்களிடம் குறுஞ்செய்தி அல்லது அழைப்புகள் மூலம் தகவல்களைக் கேட்பதில்லை. இதனை வங்கிகளே தங்களது பயனர்களிடம் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்த ஒரு தகவலை அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும், அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நாமே சென்று அதனைச் செய்யலாம் அல்லது நேரடியாக நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியையே அணுகலாம். இதுபோன்று மோசடிகளை நீங்கள் கண்டறிந்தால் cybercrime.gov.in என்ற தளத்தில் புகாரளிக்கலாம்.