இன்ஸ்டாகிராமில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்
புகைப்படப் பகிர்வு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பல புதிய வசதி ஒன்றை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியும், மேலும் சில வசதிகளை சோதனை செய்தும் வருகிறது. இதுவரை ஒரே ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போது மட்டுமே, அத்துடன் இசையைச் சேர்த்து பதிவிட முடிந்தது. இனி பல புகைப்படங்கள் அல்லது கரௌசல்களைப் பதிவிடும் போது இசையைச் சேர்ந்துப் பதிவிடும் வகையிலான புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம். இந்தப் புதிய வசதியை தற்போது தான் அனைத்துப் பயனர்களுக்கும் வெளியிட்டு வருகிறது இன்ஸ்டாகிராம். அமெரிக்க பாடகரான ஒலிவியா ரோட்ரிகோ இந்தப் புதிய வசதியை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பயன்படுத்தி, இதனை அத்தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கார்.
புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்:
இன்ஸ்டா ஸ்டோரிஸில் ஒரே டேகில் (Tag) பலரையும் குறிப்பிடும் வகையிலான புதிய டேகிங் ஆப்ஷன் ஒன்றையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது இன்ஸ்டாகிராம். ஒரே டேகில் குழுவாகப் பலரையும் டேக் செய்வதன் மூலம், தனித்தனியாக டேக் செய்வதில் இருந்து விடுதலை அளித்திருக்கிறது இன்ஸ்டாகிராம். மேலும், டேக் செய்யப்பட்டவர்களும் அதனை அப்படியே தங்களுடைய ஸ்டோரிஸில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதனைத் தவிர்த்து, கொலாப் (Collab) வசதியையும் மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். இதுவரை பொதுக் கணக்குகள் மட்டுமே கொலாப் செய்ய முடிந்த நிலையில், பொதுக் கணக்குகளுடன், பிரைவேட் கணக்குகளையும் கொலைப் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது இன்ஸ்டா. மேலும், மூன்று பேர் வரை கொலாப் செய்யும் வகையிலான மேம்பாட்டையும் அந்த வசதிக்கு அளிக்கவிருக்கிறது இன்ஸ்டாகிராம்.