இன்று வெளியாகிறது ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதள அப்டேட்
தங்களுடைய ஐபோன் மற்றும் ஐபேடுகளுக்கான புதிய இயங்குதளத்தை இன்று பொதுப் பயனாளர்களுக்கு வெளியிடுகிறது ஆப்பிள். ஐபோன்களுக்கான IOS 17 இயங்குதளமும், ஐபேடுகளுக்கான ஐபேடுஓஎஸ் 17 இயங்குதளமும் இன்று அறிமுகமாகிறது. இந்த இயங்குதளங்களை, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தங்களுடைய வருடாந்திர நிகழ்வான WWDC 2023 நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற வொண்டர்லஸ்ட் நிகழ்வில், இந்த இயங்குதளங்களின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டது அந்நிறுவனம். இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, இன்று மேற்கூறிய இரண்டு இயங்கதளங்களும் வெளியாகவிருக்கின்றன. எந்தெந்த ஐபோன்கள் இந்தப் புதிய இயங்குதளத்தைப் பெறவிருக்கின்றன என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இயங்குதளங்களில் புதிய வசதிகள்:
புதிய IOS 17 இயங்குதளத்தில், முன்னர் ஐபோனில் இல்லாத பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். கான்டாக்ட் போஸ்டர்கள், நேம்டிராப், லைவ் வாய்ஸ்மெய்ல், மேம்படுத்தப்பட்ட ஆட்டோகரெக்ட் வசதி, ஆப்பிள் மேப்ஸ் ஆஃப்லைன் மற்றும் ஸ்டிக்கர் டிராயர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கிறது IOS 17. அதேபோல, ஆப்பிள் ஐபேடுகளுக்கான ஐபேடுஓஎஸ் 17 இயங்குதளத்திலும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். புதிய மனநல வசதியுடன் கூடிய உடல்நல செயலியையும் புதிய ஐபேடுஓஎஸ்ஸூடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். இந்த ஐபேடுஓஎஸ் 17 இயங்குதளத்தையும், குறிப்பிட்ட சமீபத்திய ஐபேடுகளில் மட்டுமே வழங்கவிருக்கிறது ஆப்பிள்.
எப்படி இயங்குதளத்தை அப்டேட் செய்வது?
புதிய ஐபோன் இயங்குதளமான IOS 17ஐ அப்டேட் செய்ய Settings > General > About > Software update என்ற அமைப்புகளில் சென்று பதிவிறக்கம் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அப்டேட்டையும், ஒவ்வொரு கட்டமாகவே அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். எனவே, அப்டேட் கிடைக்கப்பெறாதவர்களுக்கு சில நாட்களில் புதிய இயங்குதளத்திற்கான அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனைப் போல, ஐபேடு இயங்தளமான ஐபேடுஓஎஸ் 17ஐ அப்டேட் செய்ய, Settings > General > About > Software update என்ற அமைப்புகளில் சென்று அப்டேட் செய்து கொள்ள முடியும்