'விண்வெளியில் தொலைந்த தக்காளிகள்' குறித்த நாசாவின் சுவாரஸ்ய வீடியோ பதிவு
சர்வதசே விண்வெளி நிலையத்தில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், சின்னச் சின்னப் பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்வதும் முக்கியமான ஒரு பரிசோதனையாக நாசாவால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நீண்ட தொலைவு விண்வெளிப் பயணங்களுக்கு சொந்தமாக விண்வெளியில் பயிர் செய்து, அதனை உணவாகப் பயன்படுத்துவது முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையித்தில் நடைபெற்ற ருசிகர சம்பவம் குறித்து தங்களுடைய நாசா ஜான்சன் யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறது நாசா. அதில், 2022ம் ஆண்டு பிராங்க் ரூபியோ என்ற விண்வெளி வீரர், அங்கு தான் அறுவடை செய்த இரண்டு சிறிய தக்காளிகளை ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டு அதைத் தொலைத்தது குறித்த ருசிகர சம்பவத்தைப் பற்றிக் கூறியிருக்கின்றனர்.
எதிர்பாராத புதிய முடிவு:
தொலைந்த அந்த தக்காளிப் பையை பல மணி நேரங்கள் தேடியும் அவரால் கண்டறிய முடியவில்லை. அதன் பின்பு தன்னுடை ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு அவர் பூமிக்கும் திரும்பி விடுகிறார். ஆனால், எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்தத் தக்காளிப் பையானது சர்வதேச விண்வெளி வீரர்களின் கண்களில் பட்டிருக்கிறது. அந்தப் பையில் இருக்கும் தக்காளிகள் சற்று நசுங்கிய நிலையில், தண்ணீர்ச் சத்து ஏதுமின்றி இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றில் நுண்ணுயிரிகளோ அல்லது பூஞ்சையோ தோன்றியதற்கான அடையாளம் எதுவுமில்லை. பூமியில் குறிப்பிட்ட நாட்களிலேயே உணவுப் பொருட்களில் நுண்ணியிரிகள் மற்றும் பூஞ்சைகள் தோன்றிவிடும். விண்வெளியில் எட்டு மாதங்களுக்குப் பின்பும் அவ்வாறு எதுவும் ஏற்படாதது புதிய ஒரு கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது.