செவ்வாயில் இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டருடனான தொடர்பை சரிசெய்த நாசா விஞ்ஞானிகள்
கடந்த 2020-ம் ஆண்டு செவ்வாய் கோளுக்கு பெர்செவரன்ஸ் என்ற ரோவருடன் இன்ஜென்யூவிட்டி என்ற ஹெலிகாப்டரையும் அனுப்பி வைத்தது நாசா. 2021, பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்செவரன்ஸ். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 19ம் நாள், பெர்செவரன்ஸ் ரோவருடன் அனுப்பப்பட்டிருந்த இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தின் வலிமண்டலத்தை எதிர்கொண்டு பறந்தது. அப்போது இருந்து இதுவரை, 51 முறை வெற்றிகரமாக இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறக்க வைத்து பல்வேறு சோதனைகளைச் செய்திருக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். ஆனால், கடந்த ஏப்ரல் 26ம் நாள், 52-வது முறை செவ்வாய் கிரகத்தில் பறக்கத் தொடங்கிய 140-வது நொடியில் இன்ஜென்யூவிட்டியுடனான தொடர்பு அறுந்து செயலற்ற நிலைக்குச் சென்றது அந்த குட்டி ஹெலிகாப்டர்.
இன்ஜென்யூவிட்டியுடன் மீண்டும் சரிசெய்யப்பட்ட தொடர்பு:
செவ்வாயில் உள்ள இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டரை, பெர்செவரன்ஸ் ரோவரின் துணையுடனே பூமியில் இருந்து நாசா விஞ்ஞானிகள் இயக்கி வருகின்றனர். ஏப்ரல் 26 அன்று, இன்ஜென்யூவிட்டி பறக்கத் தொடங்கிய பிறகு பெர்செவரன்ஸ் ரோவரில் இருந்து கொஞ்சம் அதிக தூரம் விலகி சென்று விட்டது. இதனைத் தொடர்ந்தே, பெர்செவரன்ஸூடனான அதன் தொடர்பு அறுந்து, பூமியுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டரின் அருகே ரோவர் சென்றதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டருடனான தொடர்பு மீண்டும் நிலை சரி செய்யப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டரில் வேறு எந்தக் கோளாறும் இல்லாத பட்சத்தில் அடுத்த சில வாரங்களில் தனது 53-வது சோதனையை மேற்கொள்ளவிருக்கிறது இன்ஜென்யூவிட்டி ஹெலிகாப்டர்.