
யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
மேலும், இதற்கு முன்னர் காணாத வகையிலான காட்சி விஞ்ஞானிகளுக்கு கிடைத்ததையடுத்து பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் கொண்டும் அதனை ஆராய்ந்திருக்கின்றனர்.
யுரேனஸ் கோளில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை கண்காணித்து அந்தக் கோளின் வடதுருவப் பகுதியின் குறிப்பிட்ட இடத்தை ஆராய்ந்திருக்கின்றனர். யுரேனஸ் கோளின் பிற பகுதிகளை விட அந்தக் குறிப்பிட்ட இடம் அதிக வெப்பத்தைக் கொண்டிருந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நியூ மெக்ஸிகோவில் உள்ள ஆய்வகத்திலிருந்து மேற்கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்திருக்கின்றனர்.
2015, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் முன்பை விட யுரேனஸ் கோளின் வளிமண்டலத்தை ஊடுருவி ஆராய்ச்சி செய்யும் வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்திருக்கிறது.
விண்வெளி
விண்வெளியில் யுரேனஸ் கோளின் நிலை:
யுரேனஸ் கோளானது சூரியனைச் சுற்றி வர 84 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கடந்த சில தசாப்தங்களாக அந்த கோளின் வடதுருவப் பகுதி பூமியின் எதிர் திசை நோக்கி இருந்திருக்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அக்கோளின் வடதுருவப் பகுதி பூமியை நோக்கி திரும்பியதையடுத்து விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
வடதுருவப் பகுதியில் வளிமண்டலத்தை ஊடுருவிப் பார்த்தபோது, வெப்பமான உலர் காற்று சுழன்று வருவதைக் கண்டறிந்திருக்கின்றனர். இது சூறாவளிக் காற்றுக்கான அறிகுறி. இதனைத் தொடர்ந்தே யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
தற்போது சூரிய குடும்பத்தில் புதன் (Mercury) கோளைத் தவிர்த்து பிற அனைத்து கோள்களின் துருவப் பகுதிகளிலும் சூறாவளி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.