வாயேஜர்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு, விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவிக்கும் நாசா
1977, ஆகஸ்ட் 20-ல் வாயேஜர் 2 (Voyager 2) விண்கலத்தை பூமியில் இருந்து அனுப்பியது நாசா. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களையும், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் பகுதியையும் அருகிலிருந்து ஆராயும் பொருட்டு இந்த வாயேஜர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது பூமியில் இருந்து 19.9 பில்லியன் கிமீ தூரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் வாயேஜர் 2 விண்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது நாசா. கடந்த ஜூலை-21ல் வாயேஜர் 2வுக்கு அனுப்பிய கட்டளைகளால், அதன் ஆண்டனாவாது பூமியில் பக்கமில்லாமல், 2 டிகிரி அளவுக்கு தவறான சீரமைப்பிற்கு சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நாசா. இதனால் தற்போது அந்த விண்கலத்தால், பூமியில் இருந்து சமிஞ்ஞைகளைப் பெறவோ, அதனிடமிருக்கும் தகவல்களை பூமிக்கு அனுப்பவோ இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்யப் போகிறது நாசா?
இந்த கோளாறு வாயேஜர் 2-வின் பயணத்தில் ஒரு சிறிய பின்னடைவு தான் என்றாலும், ஒவ்வொரு வருடமும் பலமுறை அதன் நோக்குநிலையை மீட்டமைக்கும் படியே வாயேஜர் 2வை வடிவமைத்திருக்கிறது நாசா. அதன்படி, வரும் அக்டோபர் 15-ம் தேதி அதன் நோக்குநிலை மீண்டும் மீட்டமைக்கும் போது இந்த நிலை சரிசெய்யப்படும் என நம்பிக்கை கொண்டிருப்பதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்க விண்வெளி அமைப்பு. இந்த காத்திருப்புக் காலத்தில், வாயேஜர் 2வது விண்வெளியில் தனது பயணத்தை அமைதியாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயேஜர் 2-வுக்கு முன்பு அனுப்பப்பட்ட வாயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து 24 பில்லியன் கிமீ தொலைவில் எந்தப் பிரச்சினையுமின்றி தனது பயணத்தை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.