120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
விண்வெளியில் பூமியில் இருந்து சுமார் 120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சுழல் வடிவம் கொண்ட NGC 3256 என்ற கேலக்ஸியைப் படம் பிடித்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. நாசாவின் ஹபுள் தொலைநோக்கியும் ,முன்னர் இதே கேலக்ஸியைப் படம்பிடித்திருக்கிறது. ஆனால், தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன், NGC 3256 கேலக்ஸி குறித்த, ஹபுளை விட துல்லியமான தகவல்களை பெற்றிருக்கிறது நாசா. இந்த NGC 3256 கேலக்ஸியானது, 500 ஆண்டுகளு முன்பு இரண்டு சுழல் வடிவ கேலக்ஸிகள் மோதிக் கொண்ட பின் உருவான புதிய கலப்பு கேலக்ஸியாகும். அந்த இரண்டு கேலக்ஸிக்களின் மோதலின் போது, பல்லாயிரக்கணக்கான புதிய நட்சத்திரங்கள் இந்த NGC 3256 கேலக்ஸியில் உருவாகியிருக்கிறது.
NGC 3256-ஐ ஏன் ஆராய்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்?
ஹபுளைப் போலல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் வெளியிடப்படும் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டே காண்கிறது ஜேம்ஸ் வெப். எனவே, கேலக்ஸிக்கள் இணைவது மற்றும் நட்சத்திரங்கள் உருவாவது குறித்து முன்னர் நாம் அறியாத பல தகவல்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்குத் தருகிறது. சாதாரண ஒளியை விட அகச்சிவப்புக் கதிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்களினூடே பயணிக்கும் திறன் கொண்டவை. புதிதாக உருவாகியிருக்கும் நட்சத்திரங்கள் அதிக அளவிலான அகச்சிவப்பு கதிர்களை வெளியிடும். எனவே தான் ஹபுளை விட அதிக அளவிலான தகவல்களை ஜேம்ஸ் வெப்பினால் சேகரிக்க முடிகிறது. NGC 3256 கேலக்ஸியை படிப்பதன் மூலம், இந்தப் பிரபஞ்சத்தின் நட்சத்திர உருவாக்கம் குறித்த புரிதலில் மேலும் ஓர் அடியை நாம் எடுத்து வைக்க முடியும்.