வாயேஜர் 2-விடமிருந்து மெல்லிய சமிஞ்ஞைகளைப் பெற்ற நாசா
கடந்த ஜூன் 21-ம் தேதி 'வாயேஜர் 2' விண்கலத்திற்கு தவறுதலாக தவறான கட்டளைகளைக் கொடுத்ததன் மூலம், அதன் ஆண்டனாவை பூமியின் பக்கமிருந்து 2 டிகிரி வேறு கோணத்திற்கு திருப்பியது நாசா. வரும் அக்டோபர் மாதம் வாயேஜர் 2 விண்கலம் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் போது மீண்டும் பூமியில் இருந்து சமிஞ்ஞைகளைப் பெறும் வகையில் அதன் ஆண்டனா கோணம் மாற்றப்படும் எனத் தெரிவித்திருந்தது நாசா. ஆனால், அக்டோபர் என்பது சற்று நீண்ட காலமாதலால், வாயேஜர் 2-வை மீண்டும் தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சியகளை எடுத்து வந்தது நாசா. அதன் இறுதி முயற்சியாக தங்களது Deep Space Network (DSN) பயன்படுத்தியிருக்கிறது அந்த விண்வெளி அமைப்பு.
ஆரோக்கியத்துடன் இருக்கும் வாயேஜர் 2:
சூரிய குடும்பத்திலிருக்கும் கோள்களுக்கிடையே பயணம் மேற்கொள்ளும் விண்கலங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ரேடியோ ஆண்டனாக்கள் மற்றும் செயற்கைக்கோள்களைக் கொண்ட நாசாவின் பிரிவே Deep Space Network. இதனைப் பயன்படுத்திய போது, வாயேஜர் 2 விண்கலம் அனுப்பிய மெல்லிய சமிஞ்ஞைகளை நாசாவால் பெற முடிந்திருக்கிறது. இந்த சமிஞ்ஞைகளைக் கொண்டு வாயேஜர் 2 விண்கலமானது நல்ல நிலையில் தனது பயணத்தை மேற்கொண்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது நாசா. இதனைக் கொண்டே வாயேஜர் 2-வுக்கு புதிய கட்டளைகளைப் அனுப்ப முயற்சி செய்து வருகிறது நாசா. இந்த திட்டம் வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு தான் எனவும் அவ்விண்வெளி அமைப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.