LOADING...
விண்வெளி நாயகியின் விடைபெறல்! 27 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்தார் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

விண்வெளி நாயகியின் விடைபெறல்! 27 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்தார் சுனிதா வில்லியம்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
09:52 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ், கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 27 ஆண்டுகால அவரது விண்வெளி பயணம் பல்வேறு உலக சாதனைகளுடன் நிறைவடைந்துள்ளது. தனது வாழ்நாளில் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார். இது ஒரு நாசா விண்வெளி வீராங்கனை மேற்கொண்ட இரண்டாவது மிக நீண்ட கால பயணமாகும். குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்ற அவர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டதை விட அதிக காலம் விண்வெளியில் தங்கி, மார்ச் 2025-இல் பூமிக்குத் திரும்பினார்.

சாதனை

விண்வெளி மாரத்தான் ஓடிய முதல் நபர்

விண்வெளியில் 9 முறை விண்வெளி நடை (Spacewalk) மேற்கொண்டு மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். நாசாவின் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன், "சுனிதா வில்லியம்ஸ் ஒரு முன்னோடி; அவரது தலைமைத்துவமும் கடின உழைப்பும் எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளது" எனப் பாராட்டியுள்ளார். தற்போது 60 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ், தனது ஓய்வு காலத்தை டெல்லியில் உள்ள தனது பூர்வீகத் தொடர்புகளை புதுப்பித்தும், மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தும் கழித்து வருகிறார்.

Advertisement