இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்போனை வெளியிடவிருக்கும் மோட்டோ
ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவிருக்கிறது மோட்டோரோலா. இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மோட்டோ G13 ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனாக இந்த G14 ஸ்மார்ட்போனை வெளியிடவிருக்கிறது மோட்டோ. 60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் LCD டிஸ்பிளே, டால்பி அட்மாஸ் வசதியுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகியவை இந்த புதிய G14-ல் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கம் மேக்ரோ விஷன் மற்றும் நைட் விஷனுடன் கூடிய 50MP டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மோட்டோ G14: ப்ராசஸர் மற்றும் விலை
இந்த புதிய பட்ஜெட் G14-ல் யுனிசாக் T616 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது மோட்டோ. UFS 2.2 ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டிருக்கும் இதில் 1 TB வரை ஸ்டோரேஜை விரிவுபடுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. பவர் பட்டனிலேயே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த G14 ஸ்மார்ட்போனானது, IP52 ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது. நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த புதிய போனை மோட்டோ வெளியிடவிருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒரு 4G ஸ்மார்ட்போனாகவே அறிமுகமாகவிருக்கிறது. மோட்டோ G13 ஸ்மார்ட்போனானது ரூ.9,999 விலையில் தற்போது விற்பனையாகி வரும் நிலையில், இந்த புதிய G14 ஸ்மார்ட்போனானது ரூ.9,000 முதல் ரூ.12,000 விலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.