Loading...
மருத்துவர்களை விட 2 மடங்கு துல்லியம்; நோய் கண்டறிதலில் மைக்ரோசாஃப்ட் ஏஐ புதிய சாதனை
மருத்துவர்களை மிஞ்சி மைக்ரோசாஃப்ட் ஏஐ நோய் கண்டறிதலில் புதிய சாதனை

மருத்துவர்களை விட 2 மடங்கு துல்லியம்; நோய் கண்டறிதலில் மைக்ரோசாஃப்ட் ஏஐ புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மருத்துவத் துறையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. சிக்கலான மருத்துவ நிலைகளையும் நோய்களையும் கண்டறிவதில், மனித மருத்துவர்களை விட இரண்டு மடங்கு அதிகத் துல்லியத்தன்மையைக் காட்டும் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது. சயின்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் குறித்துப் பேசிய மைக்ரோசாஃப்ட் ஏஐ தலைமை செயல் அதிகாரி முஸ்தபா சுலைமான், இது மருத்துவ சூப்பர் இன்டெலிஜென்ஸ் உருவாக்கத்தை நோக்கிய மிகப்பெரிய முன்னேற்றம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

செயல்பாடு 

MAI-DxO AI அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

MAI-DxO (Microsoft AI Diagnostic Orchestrator) என அழைக்கப்படும் இந்த புதிய அமைப்பு, சாதாரண சாட்பாட்கள் போல் அல்லாமல் ஒரு மெய்நிகர் மருத்துவர் குழுவாக செயல்படுகிறது.

இதில் உள்ள பல ஏஐ ஏஜென்ட்கள் ஒன்றிணைந்து நோயாளிகளிடம் கேள்விகளை எழுப்பியும், ஆய்வகப் பரிசோதனைகளை பரிந்துரைத்தும், அறிகுறிகளை விவாதித்தும் இறுதியாக துல்லியமான நோயைக் கண்டறிகின்றன.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் சமர்ப்பித்த கடினமான மருத்துவ வழக்குகளின் சிமுலேஷனில், பொது மருத்துவர்கள் 36% மட்டுமே சரியாகக் கணித்த நிலையில், MAI-DxO 83% துல்லியமாக நோயைக் கண்டறிந்து அசத்தியுள்ளது.

அபார திறன்

ஜிபிடி-5 மற்றும் ஜிபிடி-5.5 மாடல்களின் அபார திறன்

ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி-5 மற்றும் ஜிபிடி-5.5 போன்ற மேம்பட்ட ஏஐ மாடல்கள் பின்னணியில் இயங்குவதாலேயே இந்த துல்லியம் சாத்தியமாகியுள்ளது.

கூகுள் ஜெமினி 2.5 ஃபிளாஷ் மாடல் தனித்துப் போட்டியிட்டு 46.4% புள்ளிகளை மட்டுமே பெற்ற நிலையில், மைக்ரோசாஃப்டின் DxO அமைப்புடன் இணைந்தபோது அதன் துல்லியம் 69% ஆக உயர்ந்தது.

மேலும், ஜிபிடி-5.5 மாடலுடன் இயங்கும்போது DxO அமைப்பானது நோய் கண்டறிதலின் துல்லியத்தை 87% வரை உயர்த்தியதுடன், நோய் கண்டறிதலுக்கான செலவையும் கணிசமாகக் குறைத்துள்ளது.

ADVERTISEMENT

தொலைநோக்கு

நிஜ உலக சோதனைகள் மற்றும் 2027 தொலைநோக்கு

தற்போது பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகானஸ் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்படும் அதேவேளையில், இந்த ஏஐ பின்னணியில் அமைதியாக இயங்கி தனது பரிந்துரைகளை வழங்கி வருகிறது.

2027 ஆம் ஆண்டிற்குள் ஒரு நோயாளியின் மருத்துவப் பதிவுகளை வைத்து, அவரின் எதிர்கால ஆரோக்கியத்தைக் கணிக்கும் திறன் கொண்ட துல்லியமான ஏஐ அமைப்புகள் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என முஸ்தபா சுலைமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், மாயோ கிளினிக் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பிரத்யேக ஏஐ மாதிரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT