மூன்றாம் தரப்பு தளங்களிலிருந்து ஃபேஸ்புக் ஸ்டோரீக்களைப் பகிர புதிய API-யை அறிமுகப்படுத்திய மெட்டா
செய்தி முன்னோட்டம்
மூன்றாம் தரப்பு தளங்களில் இருந்து நேரடியாக ஃபேஸ்புக் ஸ்டோரீக்களைப் (Facebook Stories) பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய API ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு ஃபேஸ்புக்கிலும் ஸ்டோரீக்கள் வசதியை அறிமுகப்படுத்தியது மெட்டா.
அடோப், கேன்வா மற்றும் பிக்ஸ்ஆர்ட் போன்ற தளங்களில் ஃபேஸ்புக் ஸ்டோரீக்களில் பகிர்வதற்கான உள்ளடக்கங்களை உருவாக்க தனி டெம்ப்ளேட்களை கொண்டிருக்கின்றன.
அந்த டெம்ப்ளேட்களைக் கொண்டு ஃபேஸ்புக் ஸ்டோரீக்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கி, அதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு, மீண்டும் ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் இதுவரை பதிவேற்றம் செய்து வந்தனர்.
ஃபேஸ்புக்
நேரடியாகப் பகிரும் வகையிலான புதிய வசதி:
இப்படி மூன்றாம் தரப்பு தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பின்னர் தனியாக ஃபேஸ்புக் ஸ்டோரீக்களில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்த்து, நேரடியாக அந்தத் தளத்திலிருந்தே ஃபேஸ்புக் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைப் பகிர வழிவகை செய்வதற்காக API-யையே தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
இதன் மூலம், மூன்றாம் தரப்பு உள்ளடக்க உருவாக்கத் தளங்கள் ஃபேஸ்புக் லாகின் மற்றும் ஆத்தென்டிகேஷனை தங்களுடைய தளத்திலேயே வழங்கி, அதன் மூலம் ஃபேஸ்புக் ஸ்டோரீக்களை தங்களது தளத்திலிருந்து நேரடியாக ஃபேஸ்புக்கில் பகிரும் வசதியை தங்கள் பயனாளர்களுக்கு அளிக்க முடியும்.
ஃபேஸ்புக் வழங்கி வரும் ஸ்டோரீக்கள் வசதியை 500 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவதாக 2019ம் ஆண்டே அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.