மெமரி சிப் சந்தையில் 70% வரை விலை உயர வாய்ப்பு - அதிரவைக்கும் AI புரட்சி
செய்தி முன்னோட்டம்
சர்வதேச மெமரி சிப் சந்தையில் 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விலை உயர்வு ஏற்படும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ளதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
முன்னுரிமை
AI சர்வர்களுக்கு முன்னுரிமை
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் (SK hynix) ஆகிய முன்னணி நிறுவனங்கள், தங்களின் சர்வர் மெமரி சிப்களின் விலையை இந்த காலாண்டில் 70% வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாஃப்ட், கூகுள், மெட்டா மற்றும் ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்கள் தங்களின் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகப்படியான மெமரி சிப்களை கோருவதால், சிப் தயாரிப்பு நிறுவனங்கள் நுகர்வோர் சாதனங்களான பிசி (PC) மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான சிப் உற்பத்தியைக் குறைத்து, அதிக லாபம் தரும் ஏஐ சர்வர் சிப்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
விலையேற்றம்
சிப் விலை உயர்வு அபாயம்
ஏற்கனவே 2025-ஆம் ஆண்டில் மெமரி சிப்களின் விலை 50% உயர்ந்திருந்த நிலையில், தற்போது ஏற்படவுள்ள இந்த கூடுதல் உயர்வால் 2026-ன் பாதியிலேயே சிப்களின் விலை இரண்டு மடங்காக உயரக்கூடும். சாதாரண DRAM விலை ஏற்கனவே ஒரே காலாண்டில் 60% வரை அதிகரித்துள்ளதாக TrendForce நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலால் சிப் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் பெரும் வளர்ச்சியை சந்தித்தாலும், இது உலகளாவிய பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மெமரி சிப்களின் விலை உயர்வதால், வருங்காலத்தில் லேப்டாப், மொபைல்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. நுகர்வோர் சந்தைக்கு தேவையான சிப் இருப்பு குறைந்து வருவதால், மின்னணு துறையில் ஒரு தற்காலிக தேக்கம் ஏற்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.