Loading...
செவ்வாய் கிரக கனவுக்குப் பெரும் பின்னடைவு! மனித இதயம் தாங்காது! விண்வெளிப் பயணம் குறித்து அதிர்ச்சி ஆய்வு
செவ்வாய் கிரக கனவுக்குப் பெரும் பின்னடைவு

செவ்வாய் கிரக கனவுக்குப் பெரும் பின்னடைவு! மனித இதயம் தாங்காது! விண்வெளிப் பயணம் குறித்து அதிர்ச்சி ஆய்வு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
08:10 pm

செய்தி முன்னோட்டம்

மனித இனம் செவ்வாய் கிரகத்தில் காலடி எடுத்து வைக்கும் கனவுகளுக்கு பெரும் சவாலாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நீண்ட கால விண்வெளிப் பயணத்தின் போது நிலவும் எடையில்லா நிலை (Microgravity) மற்றும் விண்வெளிக் கதிர்வீச்சு (Space Radiation) ஆகியவை மனித இதயத்தைக் கடுமையாகப் பாதித்து, செவ்வாய் கிரகத்தை சென்றடைவதற்கு முன்பாகவே அதை செயலிழக்க செய்யும் என விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். PLoS One அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள் விண்வெளித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

எலிகளிடம் சோதனை

எலிகள் மீதான சோதனை மற்றும் எடையில்லா நிலை

விண்வெளிச் சூழலை பூமியில் உருவாக்க நாசாவின் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலிகள் மீது பரிசோதனைகள் செய்யப்பட்டன.

எலிகளின் பின்னங்கால்களைத் தூக்கி 30 நாட்கள் எடையில்லா நிலையைச் செயற்கையாக உருவாக்கிய போது, உடலின் திரவங்கள் தலைப்பகுதிக்குச் சென்றன.

பின்னர் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் உள்ள விண்வெளிக் கதிர்வீச்சு மூலம் எலிகள் மீது கதிர்வீச்சு பாய்ச்சப்பட்டது.

இந்த சோதனைக்குப் பின் எலிகள் ஒரு வருடம் (மனித வாழ்நாளில் 25 ஆண்டுகளுக்கு சமம்) தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.

மாரடைப்பு அபாயம்

இதய தமனிகளில் ஏற்படும் சுருக்கமும் மாரடைப்பு அபாயமும்

ஆராய்ச்சியின் முடிவில், கதிர்வீச்சிற்கு ஆளான எலிகளின் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளை சுற்றி பெரிவாஸ்குலர் ஃபைப்ரோஸிஸ் என்ற ஆபத்தான வடு திசுக்கள் உருவானது கண்டறியப்பட்டது.

270 நாட்களில் இந்த வடு திசுக்கள் இரட்டிப்பாகி, இரத்த நாளங்களை சுருக்கி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரித்தன.

செவ்வாய் கிரகத்திற்கு சென்று வரத் தேவையான 3 ஆண்டுகள் அளவுக்குக் குறைந்த கதிர்வீச்சைப் பாய்ச்சியபோதும், 83% எலிகளுக்கு 1 வருடத்திற்குப் பிறகு இந்த வடு உருவானது உறுதியானது

ADVERTISEMENT

மரபணு மாற்றங்கள்

நோயெதிர்ப்பு மண்டலப் பாதிப்பும் மரபணு மாற்றங்களும்

கதிர்வீச்சு மற்றும் நுண் ஈர்ப்பு விசையின் கூட்டுப் பாதிப்பால் எலிகளின் மண்ணீரலில் உள்ள நேச்சுரல் கில்லர் செல்கள் மூன்றில் இரண்டு பங்கு அழிந்தன.

இதனால் புற்றுநோய் செல்களை அழிக்கும் உடலின் இயல்புத் திறன் முடங்கியது.

மேலும் வெள்ளையணுக்களின் மரபணுக்களில் நிரந்தர மாற்றங்கள் ஏற்பட்டு, இரத்தப் புற்றுநோய், பக்கவாதம் மற்றும் திடீர் மாரடைப்பு ஏற்படுவதற்கான மரபணு ஆபத்துகள் நான்கு மடங்கு அதிகரித்தன.

மனிதனின் நீண்ட கால விண்வெளிப் பயணக் கனவுகளுக்கு இந்த ஆய்வு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT