AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்!
புதிய தொழில்நுட்பங்கள் அல்லது விஷயங்கள் இணையத்தில் வைரலாகும் போது அதனை வைத்து மோசடி செயல்கள் அரங்கேறுவதும் அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பேசுபொருளாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் வைத்து செய்யப்படும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கூகுளின் க்ரோமில் தங்களின் வசதிக்காக ப்ரௌசர் எக்ஸ்டென்ஷன்களை பயனர்கள் பயன்படுத்துவது வழக்கம். இதில் AI ப்ரௌசர் எக்ஸ்டென்ஷனகள் என்ற பெயரில் மால்வேர்களை பயனர்களின் கணனியில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மால்வேர்களை பயனர்களின் கணனியில் செலுத்த அதில் இருந்து அவர்களின் தகவல்களை திருடும் வேலையை இவை செய்வதாக மெட்டா நிறுவனம் தங்களின் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
AI போர்வையில் மால்வேர்கள்:
கடந்த சில மாதங்களில் மட்டும், சாட்ஜிபிடியைப் போலவே செயல்பாடுடைய 1000-க்கு மேற்பட்ட மால்வேர்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டிருக்கின்றன. 'சாட்ஜிபிடி ஃபார் கூகுள்' என்ற நம்பகமான எக்ஸ்டென்ஷன் ஒன்றின் பெயரில் போலியான ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கூகுளின் பயனர்கள் தேடும் தகவல்களை திருடியிருக்கின்றனர். சிலர் மால்வேர்கள், ஃபேஸ்புக் கணக்குகளின் தகவல்களைத் திருடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு எக்ஸ்டென்ஷனையும் பயன்படுத்துவதற்கு முன் அவை நம்பகத்தன்மையானதா எனத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. மேலும், AI தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை நம்பகமான நிறுவனங்களின் சேவை என்றால் மட்டும் பயன்படுத்துவது பயனர்களின் இணையப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.