LOADING...
எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நூதன மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மோசடி

எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நூதன மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 13, 2026
06:57 pm

செய்தி முன்னோட்டம்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவின் கல்யாண்-டோம்பிவிலி பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள், இத்தகைய மோசடியில் சுமார் ₹4 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஏசிபி சுஹாஸ் ஹெமாடே கூறுகையில், "எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சூழலில், கேஸ் தகவல் அப்டேட் தருவதாகக் கூறி வந்த செய்தியை நம்பி, அந்தப் பெண்கள் தங்களது செல்போனில் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். அதன் விளைவாக, அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் ₹4 லட்சம் திருடப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

மோசடி

மோசடி கும்பலின் நூதன முறைகள்

சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மற்றும் சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மக்களைக் குறிவைக்கின்றனர். "இன்றே பணம் கட்டுங்கள், நாளை சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்" போன்ற கவர்ச்சிகரமான செய்திகளை அனுப்புகின்றனர். இண்டேன், பாரத் கேஸ் போன்ற நிறுவனங்களின் இலச்சினைகளைப் பயன்படுத்திப் போலி இணையதளங்களை உருவாக்கி, மக்களை நம்ப வைக்கின்றனர். லிங்குகளைக் கிளிக் செய்து விபரங்களைப் பதிவிடும்போது, உங்களின் வங்கித் தகவல்கள் திருடப்பட்டுப் பணம் பறிக்கப்படுகிறது. எந்தவொரு எரிவாயு நிறுவனமும் தனிப்பட்ட செய்திகள் அல்லது சந்தேகத்திற்குரிய லிங்குகள் மூலம் முன்பணம் கேட்காது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு

உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 5 வழிகள்

சிலிண்டர் முன்பதிவு மற்றும் தகவல்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் அல்லது இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் யுபிஐ பின், ஓடிபி அல்லது வங்கி ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம். ஏதேனும் தளத்தில் விபரங்களைப் பதிவிடும் முன், அதன் முகவரியில் '.gov.in' அல்லது '.com' போன்ற சரியான குறியீடுகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால் அல்லது மோசடி முயற்சியைக் கண்டால், உடனடியாக இந்தியாவின் சைபர் குற்றப்பிரிவு உதவி எண்ணான 1930க்கு அழைத்து புகார் அளிக்கவும். தற்போதைய நெருக்கடியான சூழலில், பதற்றமடைந்து முன்பணம் செலுத்துவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement